
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டது பாஜக அரசின் திட்டமிட்ட சதி என அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி போலீசார் கடந்த 4 நாட்களாக தினகரனிடம் நடத்திய விசாரணையில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார், அவர் இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இந்நிலையில் தினகரன் கைதால் அதிர்ச்சியடையவில்லை என்றும் இந்த சதித்திட்டத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
தினகரன் கைதுக்கு பின்னால் பாஜகவின் சதித்திட்டங்கள் உள்ளன எனத் தெரிவித்த நாஞ்சில் சம்பத், இப்போது தான் தினகரன் முழு பலம் பெற்றுள்ளார் என்றும் இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அதிமுகவின் துரோகிகளை பாஜகதான் இயக்கி வருகிறது, தற்போது தினகரன் கைது பின்னணியில் பாஜக தான் உள்ளது என்பது நிரூபனமாகியுள்ளது என உறுதிபடத் தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை தனது கைப்பாவையாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என குற்றம்சாட்டிய சம்பத், ஒரு மோசமான முன்னுதாரணத்தை பாஜக ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.