
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதன் மூலம் டி.டி.வி.தினகரன் தமிழகத்துக்கு தீராத அவமானத்தை தேடித் தந்துவிட்டார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தடாலடியாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணி துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாலேயே டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தினகரனின் கைதுக்கு பின்னணியில் பாஜக உள்ளது என தெரிவித்த தமிழிசை, லஞ்சம், ஊழலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கைது செய்து தண்டனை வாங்கித் தருவதில் எப்போதுமே பாஜக பின்னால் இருக்கும் என கூறினார்.
சட்டம் தன் கடமையை செய்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையிலேயே தினகரன் கைது செய்யப்பட்டுள்ளதாவும் தமிழிசை தெரிவித்தார்..
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற மரபை உருவாக்கிய தினகரன், தேர்தல் ஆணையத்திற்கும் ஊழல் பணத்தை சன்மானமாக கொடுத்து தன்மானத்தை விற்றவர் என்று தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.
டி.டி.வி.தினகரனின் இந்த செயல் தமிழகத்திற்கே மிகப்பெரிய அவமானத்தை தேடித் தந்திருப்பதாக கூறிய தமிழிசை அவரை மனித புனிதரைப் போல நடத்துவது நகைப்புக்குரியது என்றார்.
யார் குற்றம் செய்தாலும் தண்டனை கிடைத்தே தீரும் தினகரனின் கைது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.