
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நேற்று நள்ளிரவு அதிரடியாக கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் ஆகிய இருவரும் டெல்லி காவல்துறையினரால் நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து 4 நாட்களாக டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜரான தினகரனிடம் நேற்று தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தினகரன், மல்லிகார்ஜுன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் தினகரன் முரண்பட்ட தகவல்கள் அளித்தாகவும் பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் தெரிவித்த தகவல்கள் காவல்துறைக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து விசாரணை நடந்த காவல்நிலைய சிறையிலேயே தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டில்லியிலுள்ள திசஜாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தினகரன் நேரில் ஆஜர்படுத்தப்படுகிறார். அதே நேரத்தில் தினகரனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்த விரும்பினால் அவர் போலீஸ் காவலில் எடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.
போலீஸ் காவலில் எடுக்க நீதிபதி மறுத்தால், இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள்.
சுகேஷ் சந்திர சேகருடன் உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டால், தினகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்றும் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படும் பட்சத்தில் தினகரன் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது, அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என தினகரனின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.