
தமிழிசை வேதனை
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தன்னை ஒருவர் ஒருமையில் திட்டியதை வேதனையுடன் தெரிவித்தார். இரண்டு மாநிலத்தில் அவள் கவர்னராக இருக்கிறாள் என்று ஒருவர் தன்னை விமர்சித்து பேசியதாக குறிப்பிட்டார். இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமமான காரியம். அதிலும் தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலங்களுக்கும் கவர்னராக இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இப்படிப்பட்ட நிலையில் தன்னை ஒருவர் ஒருமையில் பேசுவதாக கூறினார். இவளெல்லாம் இரண்டு மாநிலங்களுக்கு கவர்னரா? என்றும் கேட்கிறார் என வேதனை பட்டார். தயவு செய்து யாரையும் திட்டுவதாக இருந்தாலும் கூட மரியாதையாக அழகுத்தமிழில் திட்டுங்கள் என கேட்டுக்கொண்டார். மரியாதையாக திட்டவில்லை என்றால் நீங்கள் தமிழரே கிடையாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்தார்.
ஒருமையில் பேசுவது தமிழ் இலக்கிய மரபு
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஒருமையில் பேசியதாக தகவல் வெளியான நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் அண்ணா விருது பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தான் ஒருமையில் பேசியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மேடையை என்னை விமர்சிக்க பயன்படுத்தலாமா என கேள்வி எழுப்பினார். தன்னை விட அருந்தமிழில் பேசுபவர்கள் தமிழ் நாட்டில் யார் உள்ளார் அப்படி ஒருவர் இருந்தால் வர சொல்லுங்கள் என கூறினார். மேலும் தமிழிசையை அவள் என ஒருமையில் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒருமையில் பேசுவது என்பது தமிழ் இலக்கிய மரபு, தான் தமிழ் இலக்கியம் படித்தவன் என கூறினார். பராசக்தியை சொல்லடி சிவசக்தி என கூறிய பாரதியார் மீது வழக்கு தொடரப்படுமா என கேள்வி எழுப்பினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மேடையை என்னை விமர்சிப்பதற்கு ஏன் எடுத்துக் கொண்டார்கள் என்று புரியவில்லை என கூறினார்.
கருத்துரிமை மீது அறிவிக்கப்படாத போர்
ஆளுநர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு பேச சென்றால் தமிழ் பல்கலைக்கழகம் பற்றியும் தமிழ் பற்றிதான் பேச வேண்டும், நாஞ்சில் சம்பத் பற்றி பேசக்கூடாது என கூறினார். அத்துமீறியுள்ளார் தெலுங்கானா ஆளுநர், அதிகாரத்தை மீறியுள்ளார் தெலுங்கானா ஆளுநர்,கருத்துரிமையை மீது அறிவிக்கப்படாத போர் தொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
தவறுதலாக பேசியிருந்தால் தவறுதலாக பேசினேன் என்று கூறலாம் ஆனால் நான் தவறுதலாக பேசவில்லை எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். ஆளுநர் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ஆண்டவனே விமர்சனத்திற்கு உட்பட்டவர் தான் என கூறினார். அண்ணா விருது பெற்றவன் அண்ணா விருதுக்கு தகுதி பெற்றவனாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.