முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்பாக பொன்னையன் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி அளித்த நாஞ்சில் கோலப்பன் ஓபிஎஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் அதிகார மோதல்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக பல பிரிவாக பிளவு பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை அதிமுகவில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் இருப்பதாக கூறி ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்தார். இதற்கு ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக பொது குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து சட்டப் போராட்டத்தை ஓபிஎஸ் நடத்திய நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.
பொன்னையனின் ஆடியோ வெளியீடு.?
அப்போது ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பன் ஒரு ஆடியோ பதிவை ஒன்று வெளியிட்டு அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசுவதாக ஒரு ஆடியோவானது வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் அதிமுக மூத்த நிர்வாகிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாஞ்சில் கோலப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பேட்டி அளித்திருந்தார். அதில் அதிமுக நிர்வாகி ஆடியோவை வெளியிட்டதால் பெரும்பாலானோர் என்னிடம் பேசவே பயப்படுவதாக கூறினார். என் மீது பேச நம்பிக்கை இல்லாத நிலை இருப்பதாகவும், இதானல் பல இழப்புகளை சந்தித்ததாக தெரிவித்திருந்தார்.
நாஞ்சில் கோலப்பன் நீக்கம்
இதனையடுத்து நாஞ்சில் கோலப்பன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த பரபரப்பான நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், திரு. நாஞ்சில் K.S. கோலப்பன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
சென்னை, திருவள்ளூரில் இடி மின்னலோடு விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை...பொதுமக்கள் மகிழ்ச்சி