யார் ஜெயிப்பாங்க ? நாங்குனேரி, விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை !

By Selvanayagam PFirst Published Oct 24, 2019, 6:06 AM IST
Highlights

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் ஆகிய தொகுதிகளில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள்  இன்று எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 66.35 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.


இதே போல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி இறந்தார். இதையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ந் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன் திமுக சார்பில்  புகழேந்தி  , நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உட்பட  12 பேர் போட்டியிட்டனர்.

இத்தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 84.41 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தல் முடிவடைந்ததும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். முன்னணி நிலவரம் காலை 9 மணியில் இருந்து தெரியவரும்.

இதே போன்று புதுச்சேரி மாநிலம் காமராஜ்நகர் தொகுதியில் நடைபபேற்ற  இடைத் தேர்தல் வாக்குளும் இன்று எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகலுக்குள் மூன்று தொகுதி முடிவுகளும் தெரியவரும்.

click me!