நாங்குநேரி யாருக்கு..? காங்கிரஸ் கட்சிக்கும் குடுமிபிடி சண்டை ஆரம்பம்..!

By vinoth kumarFirst Published Sep 24, 2019, 10:45 AM IST
Highlights

யாருக்கு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது என காங்கிரஸ் மேலிடம் தவித்து வருகிறது. அதே சமயம் நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட காரணமே நான் தான் எனவே எனக்கு தான் அங்கு வாய்ப்பு என்று குமரி அனந்தன் பேசி வருகிறார். அதே சமயம், என் மகனுக்கு அந்த சீட்டை கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று வசந்தகுமார் கூறி வருவதாக சொல்கிறார்.

திமுகவிடம் போராடி பெற்ற நாங்குநேரியில் யாரை நிறுத்துவது என்பதில் காங்கிரசுக்குள் குடுமிபிடி சண்டை ஆரம்பமாகியுள்ளது.

வசந்தகுமார் ராஜினாமாவால் காலியான நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இதே போல் நாங்குநேரியில் திமுக வேட்பாளர் நின்றால் தான் வெற்றி பெற முடியும் என்று வெளிப்படையாகவே உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஆனால் கடைசி நேரத்தில் டெல்லி தலையீட்டால் நாங்குநேரியை திமுக, காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இதில் முதல் ஆளாக சென்ற மூத்த காங்கிரஸ் தலைவரும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மனுவை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தார். அத்தோடு நாங்குநேரியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று கூறிவிட்டு அவர் சென்றார். அதே சமயத்தில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வசந்தகுமாரின் மகன் வசந்த் விஜய் ஆர்வமாக உள்ளதாக சொல்கிறார்கள். தற்போது தந்தையின் தொழிலை கவனித்து வரும் விஜயால், சினிமா உலகில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இதனால் அரசியலில் கால் பதிக்க விரும்புகிறார்.

இதற்கு தந்தையும் ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் வசந்த் விஜய் சார்பிலும் விருப்ப மனுக்களை சத்தியமூர்த்தி பவனில் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இவர்கள் இருவர் மட்டும் அல்லாமல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திரண்டு வந்து விருப்ப மனுக்களை கொடுத்துள்ளனர்.

இதனால் யாருக்கு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பது என காங்கிரஸ் மேலிடம் தவித்து வருகிறது. அதே சமயம் நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட காரணமே நான் தான் எனவே எனக்கு தான் அங்கு வாய்ப்பு என்று குமரி அனந்தன் பேசி வருகிறார். அதே சமயம், என் மகனுக்கு அந்த சீட்டை கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று வசந்தகுமார் கூறி வருவதாக சொல்கிறார்.

நாங்குநேரிக்கு தொடர்பு இல்லாத குமரி அனந்தன், வசந்தகுமார் மகனுக்கு தொகுதியை கொடுத்தால் இந்த முறை வேலை செய்யமாட்டோம் என்று காங்கிரசில் ஒரு தரப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இதனால் தொகுதி யாருக்கு என்பதில் மோதல் நீடிக்கிறது.

click me!