தமிழகத்தில் மாற்றுச் சக்தியாக உருவாகும் நாம்தமிழர் கட்சி..?? வலுவான அடித்தளம் போடும் சீமான்

By Ezhilarasan BabuFirst Published May 3, 2021, 4:33 PM IST
Highlights

 சுமார் 170 க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி இடம் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 6.85 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சி வாரியாக வாக்கு சதவீத விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், திமுக 1,74,29,877  வாக்குகள் பெற்று 37% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதேபோல அதிமுக 1,53,90,864  வாக்குகள் பெற்று 33.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.  இந்த தேர்தலில் அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்கப் போகிறது, தேர்தலுக்குப் பின்னர் காட்சியே இருக்காது என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அது தனக்கான வாக்கு வங்கியை உறுதியாக தக்க வைத்துக் கொண்டுள்ளதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

அதேபோல 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் தனக்கான வாக்கு வங்கியை உயர்த்தி சாதனைபடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், அது 6.85 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது பெரிய கட்சிகள் என மார்த்தட்டும் சக கட்சிகளை வாய்பிளக்க வைத்துள்ளது. எந்த கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றுள்ளது என்பதன் விவரம் பின்வருமாறு: 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது, இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், அதிமுக, அதன் கூட்டணிக்,கட்சிகள், அமமுக , அதன் கூட்டணிக் கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உட்பட அதன் கூட்டணி கட்சிகள், அதேபோல் நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டிகள் நிலவியது.  இத்தேர்தலில்  எப்படியான மூன்றாவதுமுறையும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தீவிரமாக போராடியது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவும், இம்முறை வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வாழ்வா சாவா போராட்டம் நடத்தியது.  ஒவ்வொரு கட்சிகளும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தேர்தலில் போராடின,  நாம் தமிழர் கட்சியும் வழக்கம்போல  234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு தனது கொள்கையை நிலைநாட்டி உள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவு நேற்று வெளியானது, அதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது, இதன்மூலம் திமுக தான் வலுவான கட்சி என்பதை மீண்டும் உறுதிசெய்திருப்பதுடன், தங்களுக்கான மக்கள் செல்வாக்கையும் அதை காட்டியுள்ளது. அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் கட்சி வாரியாக வாக்கு சதவீத விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக 1,74,29,877  வாக்குகளுடன் அதாவது  37.7 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. அதற்கு அடுத்து நிலையில் உள்ள அதிமுக 1,53,90,864 வாக்குகளைப் பெற்று சுமார் 33.3 சதவீதம் வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் சுமார் 170 க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி இடம் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 6.85 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. அதேபோல், நான்காவது இடத்தில் 4.41 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியும், 4.4 சதவீத வாக்குகளுடன் பாமக 5வது இடத்திலும், 2.73 சதவீத வாக்குகளுடன் பாஜக 6வது இடத்திலும்,  2.47 சதவீத வாக்குகளுடன் அமமுக 7வது இடத்திலும், 2.45 சதவீத வாக்குகளுடன் மக்கள் நீதி மையம் 8வது இடத்திலும், சிபிஐ 1.17 சதவீதம்,  மதிமுக 1.13 சதவீதம், விசிக 1.6 சதவீதம் வாக்குகளை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனித்து நின்று சாதித்த நாம் தமிழர் கட்சி: 

கட்சி துவங்கப்பட்டது முதல், இந்நாள் வரை நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டு வருகிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்து  வாக்கு அரசியலில் ஈடுபட்டு வரும் அக்கட்சி 2016ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.10 சதவீத வாக்குகளை பெற்றது. அதைத்தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் கண்டது, அதில் மொத்தமாக அக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 17 லட்சம் ஆகும். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிட்டவில்லை. ஆனால் தளராத நாம் தமிழர் கட்சி தான்கொண்ட கொள்கைப்படி கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு பிற கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். நிச்சயம் அவர் வெல்வார் என அக்கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தொகுதியில் 48 ஆயிரத்து 597 வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.

234  தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை என்றாலும், ஆனால் அக்காட்சி சுமார் 170 க்கும் அதிகமான இடங்களில் மூன்றாவது இடம் பிடித்தது, பாமக, தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகள் கூட சாதிக்காததை நாம் தமிழர் செய்து காட்டியுள்ளது. அதாவது மிகப் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு அடுத்த நிலைக்கு நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள் நாம் தமிழருக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதேநிலை தொடரும் பட்சத்தில் நிச்சயம் தமிழகத்தில் மாற்று சக்தியாக நாம் தமிழர் உருவாகும் என்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 
 

 

click me!