கொரோனாவுக்கு எதிராக பாரம்பரிய கபசுரக் குடிநீர் , இளைஞர்களை படை திரட்டச்சொல்லும் சீமான்..!!

Published : Apr 13, 2020, 06:04 PM IST
கொரோனாவுக்கு எதிராக பாரம்பரிய கபசுரக் குடிநீர் ,  இளைஞர்களை படை திரட்டச்சொல்லும் சீமான்..!!

சுருக்கம்

சித்த மருத்துவர்கள் உருவாக்கிய கபசுரக் குடிநீரை  நகரங்களில் ஒவ்வொரு பகுதிக்கும்  கிராமங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தது தன்னார்வலர்களே.

கொரோனோ நோய்த்தொற்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து தெரிவித்துள்ள அவர், கொரோனோ நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்பேரிடர் காலத்தில் உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் வழியின்றி அல்லல்படும் மக்களுக்கு உதவும்பொருட்டு அர்ப்பணிப்போடு களமிறங்கி தொண்டாற்றும் தன்னார்வலர்களின் பணிகளுக்கு தமிழக அரசு தடைவிதித்தது முறையல்ல!  மழை, வெள்ளம், புயல் தொடங்கி கொரோனோ வரை எத்தகையப் பேரிடர் காலத்திலும் அரசும்,  அதிகார அமைப்புகளும் மட்டுமே மீட்புப்பணிகளையும், காப்பு நடவடிக்கைகளையும் செய்துவிட முடியுமென்பது சாத்தியமற்றது.  அத்தகையக் காலக்கட்டத்தில் அரசோடு மக்களும் இணைந்துதான் பேரிடர் தந்த துயரிலிருந்து மீண்டுவர முடியும் என்பதே களச்சூழலின் அடிப்படையில் கற்றுணர்ந்த உண்மை. 

தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு நெருக்கடியால் வீட்டுக்குள் முடக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு எத்தனை பேர், எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவர்களது அடிப்படைத்தேவையைக் கூட முழுமையாக நிறைவு செய்ய முடியாத சூழலே உள்ளது. அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை 8வதுதெருவில் பெயின்ட் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சார்ந்த ராஜீவ் (25) என்கிற தொழிலாளி ஊரடங்கு உத்தரவால் கம்பெனி மூடப்பட்டதால் ஊருக்கு செல்ல முடியாமலும், உணவின்றியும் தவித்து வந்தவர்,  சரியான உணவு  கிடைக்காததால், கம்பெனிக்குள் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.  இந்நிலையில் இத்தடை தொடர்ந்தால் அது பெரும் பட்டினி சாவிற்கு வழிவகுக்கும். கொரோனோ நோய்த்தொற்று பரவலை முறியடிக்கவும், மூன்றாம் நிலையை எட்டாது தடுக்கவும் தனிமனித விலகலும் (Social Distancing) , தனிமைப்படுத்தலும் மிக அத்தியாவசியமான இக்காலக்கட்டத்தில் ஒழுங்கும், கட்டுப்பாடும், கட்டுக்கோப்பும் பேரவசியமாகிறது.  

அதனைக் குலைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொண்டாற்றும் நோக்கத்தோடு இந்நெருக்கடித்தருணத்திலும் களத்தில் நிற்க முனையும் இளையோர் கூட்டத்தினைப் புறக்கணிப்பு செய்யக்கூடாது.  அத்தகைய ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வரமுடியாத சூழலில் மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்யும் நோக்கில் நமது பாரம்பரிய சித்த மருத்துவர்கள் உருவாக்கிய கபசுரக் குடிநீரை  நகரங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் கிராமங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தது தன்னார்வலர்களே. மேலும் உணவின்றி உதவிக்கு அரசை எப்படி அணுகுவது என்று கூட தெரியாத பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களே  உணவும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வருவது கண்கூடு.  

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என நாட்டைக் காக்கும் போரில் ஈடுபட்டு, மக்களின் காப்பரண்களாக விளங்கும் அத்தகையவர்களின் உயர்ந்த நோக்கத்திற்கும், பெரும்பணிகளுக்கும் தன்னார்வலர்களைப் பக்கத்துணையாக சேர்த்துக் கொள்ளுதல் பெரிதும் நலன்பயக்கும். ஆகவே, மக்களுக்கு உணவும், அத்தியாவசியப் பொருட்களும் வழங்க முன்வரும் அத்தகையவர்களின் உதவிக்கரம் மக்களை நோக்கி நீள அவர்களுக்கான அனுமதியை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சியினர் உட்பட பல அமைப்பினர் தமிழகம் முழுக்க அரசோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றனர் ஆகவே அப்படியான தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து அவர்களைப் படையாகக் கட்டமைத்து துயர்துடைப்பு மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தி செயலாற்ற வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!