
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது அம்மா, வரும் 17 ஆம் தேதி அல்லது பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவு பெற்றது.
அதிமுகவில் பல்வேறு அரசியல் நிலை எழுந்தது. அப்போது ஆட்சி ஒபிஎஸ்சுக்கும் இல்லாமல் சசிகலாவுக்கு இல்லாமல் எடப்பாடி கைக்கு போனது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். ஒபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதனால் இரட்டை இலையும் முடங்கி போனது.
டிடிவி தினகரன் எடப்பாடி பக்கம் இருந்தும் கட்சியை ஒழுங்குபடுத்த முடியாததால் முதலமைச்சர் எடப்பாடி ஒபிஎஸ் பக்கம் சாய்வது என முடிவு செய்தார். இதைதொடர்ந்து ஒபிஎஸ் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவது என இபிஎஸ் முடிவெடுத்து அணிகளை ஒன்றிணைத்தார். அப்போது ஒபிஎஸ் வைத்த கோரிக்கையான சசிகலாவை நீக்கம் செய்வது, ஜெ மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைப்பது என இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றி உத்தரவிட்டார்.
தினகரன் அணியினர் நமது எம்.ஜி.ஆரையும், ஜெயா டிவியையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டதால், அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ நாளேடும், டிவியும் தொடங்க நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாளிதழுக்கு நமது அம்மா என்றும், தொலைக்காட்சிக்கு நமது அம்மா என்றும் பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
நமது அம்மா நாளிதழ், வரும் 17 ஆம் தேதி அன்று அதாவது அதிமுக நிறுவனர் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான அன்றோ அல்லது ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அன்றோ செயல்பட தொடங்கும் என்று அதிமுகவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அதிமுக நமது அம்மா நாளிதழ் வெளி வந்ததும், நமது அம்மா டிவியும் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.