
அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என கூறிய ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை தொடர்ந்து எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பனை சந்தித்து பேசினார்.
ரஜினிகாந்த், தான் அரசியலில் இறங்குவது உறுதி என அறிவித்து விட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதாக வெளியான தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு 7.30 முதல் 8 மணி வரை ரஜினிகாந்த் கருணாநிதியை சந்திக்க நேரம் கொடுக்கப் பட்டது. இதை அடுத்து, போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கிளம்பிய ரஜினி காந்த், அருகில் உள்ள கோபாலபுரத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
கோபாலபுரம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திக்க செல்கிறேன் என்றும். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளேன் என்றும் கூறிய ரஜினி கருணாநிதி என்னுடைய நீண்டகால நண்பர் என்றார்.
இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திமுக., தலைவர் மு.கருணாநிதியை அவர் சந்தித்தார். கோபாலபுரம் வந்த ரஜினி காந்த்தை விட்டு வாசலுக்கு வந்து வரவேற்றார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் செய்தியார்களிடம் பேசிய ரஜினிகாந்த், கருணாந்திக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன் என்றார்.
மேலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்து கருணாநிதியிடம் ஆசி பெற்றேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
தனது அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்புக்கு பின் ரஜினிகாந்த் சந்திக்கும் முதல் தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து மூத்த அரசியல் தலைவர்கள் லிஸ்டில் ரஜினியின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன்.
எனவே அடுத்ததாக ஆர்.எம்.வீரப்பனை ரஜினி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அவரை நேரில் சந்தித்து பேசி வருகிறார் ரஜினி.
எம்.ஜி.ஆரின் வலதுகையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்பது குறிப்படதக்கது.