ராமர் கால் தடத்திற்கு பாதிப்பில்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டம்.! முதலமைச்சரின் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு

By Ajmal KhanFirst Published Jan 12, 2023, 12:01 PM IST
Highlights

தெய்வமாக வழிபடும் ராமர் கால் தடத்திற்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்தை பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

சேது சமுத்திர திட்டம்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகும் என கூறினார். இனியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என குறிப்பிட்டார். எனவே தாமதமின்றி இந்த  சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என குறிப்பிட்டு முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தார். 

தெய்வ நம்பிக்கையை எதிர்க்க கூடாது

இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்து பேசினார்கள். இதனை தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் சேது சமுத்திரம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தால் அதனைப் பற்றி பேச வேண்டும் ஆனால் ராமர் ராமாயணத்தை பற்றி சிலர் பேசுகிறார்கள். அதனை எதிர்க்க கூடாது, தெய்வ நம்பிக்கை என பேசுவது எப்படி ஏற்க முடியும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது தெய்வ வழிபாட்டை குறை சொல்வதைக் கேட்க முடியாது. அதனை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதத்தைப் பற்றியோ தெய்வத்தை குறை சொல்லி யாரும் பேசவில்லை. தெய்வங்கள் பெயரை சொல்லி சில திட்டத்தை செய்ததாக பேசியதாக குறிப்பிட்டார். 

ராமர் கால் தடத்திற்கு பாதிப்பு கூடாது

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், சேது சமுத்திர திட்டம் வருமானால் எங்களை விட மகிழ்ச்சி அடைவது யாரும் இல்லை. அதைவிட ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி எதுவும் இல்லை. வாஜ்பாய் காலத்தில் ஆய்வுகள் செய்யப்பட்டு மன்மோகன் சிங் காலத்தில் அடிக்கல் நாட்டினார். தெய்வமாக வழிபடும் ராமர் கால் தடத்திற்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்தை பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம் என பேசினார். 

இதையும் படியுங்கள்

இனி கை ரேகை தேவையில்லை..!கண் கருவிழி பதிவு மூலம் உணவு பொருட்கள்- அமைச்சர் சக்கரபாணி அதிரடி அறிவிப்பு

click me!