கண் கருவிழி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
பாக்கெட்டுகளில் அரிசி, சக்கரை
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். மேலும் நியாயவிலைக் கடைகளில் கைரேகை வைத்து பொருள் பெற இயலாததால் மாற்றுத்திறனாளிகள், வயலில் வேலை செய்வோர் பாதிக்கப்படுவதாக கூறினார்.
கண் கருவிழி பதிவு- உணவு பொருள்
எனவே கண் கருவிழி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மாதிரி திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர்புறத்தில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் டெண்டர் விடப்பட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
ரேசன் கடையில் விண்ணப்பம்
அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி, பொருள்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டார்.இதற்கிடையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, கைரேகை அழிந்தவர்களுக்கு நியாய விலை கடைகளிலேயே விண்ணப்பங்களை பெறக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சக்கரபாணி, வருவாய்துறை அலுவலகங்களுக்கு செல்லும் நிலை மாற்றப்பட்டு நியாய விலை கடைகளிலேயே இந்த விண்ணப்பங்களை கொடுக்கும் முறை அமல்படுத்தப்பட பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்