ஊதுகுழலாக செயல்பட்டு வருகிற ஆளுநரை பதவியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற ஜனவரி 19 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
திருமகன் ஈவேராவிற்கு மறைவிற்கு இரங்கல்
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக "அரசியலமைப்பை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம்" என்ற பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானமான ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுது தமிழக ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிராக போராட்ட நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில்,
தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யணும்.. ஆளுநருக்கு பாதுகாப்பே இல்லை! இவரே இப்படி சொல்லிட்டாரு.!!
அதிகாரத்தை மீறும் ஆளுநர்
தமிழக ஆளுநராக திரு. ஆர்.என். ரவி அவர்கள் நியமிக்கப்பட்டது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதை அனைத்து எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. தமிழ்நாடுஅமைச்சரவை நிறைவேற்றிய நீட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் முடக்கி வைத்திருக்கிறார். அதுமட்டுல்லாமல், நடைபெறவுள்ள பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னத்தை அகற்றிவிட்டு மத்திய அரசின் சின்னத்தை இடம் பெறச் செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இது தமிழ்நாடு அரசுக்கு விரோதமானது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிரானதாகும்.
ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர்
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9.1.2023 அன்று அரசு தயாரித்த ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் சில முக்கியமான பகுதிகளை தவிர்த்தது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதோடு, நீண்டகாலமாக பின்பற்றி வந்த சம்பிரதாயங்களை அப்பட்டமாக அவர் மீறியிருக்கிறார். ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற யார் பெயர்களையும் வாசிக்க மறுக்கிற ஒருவர் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று இக்கூட்டம் கருதுகிறது. தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டுமென்று ஆளுநர் கூறியிருப்பது அப்பட்டமான தமிழர் விரோத போக்காகும்.
234 தொகுதிகளில் போராட்டம்
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு விரோதமாக ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இயக்கங்களின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிற ஆளுநரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீவிரமான போராட்டத்தை ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் முன்னெடுக்க வேண்டியது மிகமிக அவசியம் என இக்கூட்டம் கருதுகிறது.
ஊதுகுழலாக செயல்பட்டு வருகிற ஆளுநரை பதவியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற ஜனவரி 19 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை எந்தளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.. அன்புமணி கவலை.!