
கர்நாடக காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பளிக்க தயாராக உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆர்.ஆர்.நகர், ஜெயா நகர் ஆகிய இரண்டு தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக 104 இடங்களையும் காங்கிரஸ் 78 இடங்களையும் மஜத 38 இடங்களையும் கைப்பற்றியது. 2 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், அந்த கூட்டணி 115 எம்.எல்.ஏக்களை(குமாரசாமி இரண்டு இடங்களில் வென்றுள்ளதால் ஒரு இடம் காலியாகும்) கொண்டுள்ளது. எனவே 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கர்நாடக ஆளுநரிடம் குமாரசாமி கடிதம் கொடுத்தார்.
அதேநேரத்தில் 104 எம்.எல்.ஏக்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதால், எடியூரப்பாவும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். கர்நாடக ஆளுநர், எடியூரப்பாவிற்கே அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று காலை கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். 104 எம்.எல்.ஏக்களை மட்டுமே பாஜக பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் ஆளுநர் வஜூபாய் வாலா.
எனவே இந்த 15 நாட்களில் குதிரைபேரம் நடக்க வாய்ப்புள்ளதால், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை அந்த கட்சிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே பாஜகவை வீழ்த்த துடித்து கொண்டிருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பளிக்க முன்வந்துள்ளனர்.
குதிரைபேரத்திலிருந்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை காக்கும் விதமாக ஆந்திராவில் பாதுகாப்பளிக்க தயார் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதேபோல, காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தயார் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் தெரிவித்துள்ளார்.