என் வழி தனி வழி..! ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. குழப்பத்தில் ஆதரவாளர்கள்..!

By Selva KathirFirst Published Nov 5, 2020, 10:43 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கும் வரை அரசியல் தொடர்பான நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துள்ளதாகவும் தனது துறை சார்ந்த பணிகள் என்றால் மட்டும் தன்னை வந்து கட்சிக்காரர்களை சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளார் ஓபிஎஸ்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கும் வரை அரசியல் தொடர்பான நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துள்ளதாகவும் தனது துறை சார்ந்த பணிகள் என்றால் மட்டும் தன்னை வந்து கட்சிக்காரர்களை சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளார் ஓபிஎஸ்.

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பிறகு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கிறார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் கூட கடந்த சில நாட்களாகவே கட்சி, நிர்வாகிகள் தொடர்பான விவகாரங்களில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். பெரும்பாலும் தனது துறை சார்ந்த கூட்டங்கள், திட்டங்கள் போன்வற்றில் மட்டுமே ஓபிஎஸ் ஆர்வம் காட்டி வருவதாக சொல்கிறார்கள். அதிலும் தனது வீட்டில் மாலை நேரத்தில்வழக்கமாக நடைபெறும் அரசியல் சந்திப்புகளுக்கு முற்றிலுமாக அவர் தடைபோட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் இருக்கும் போது அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி போன்றோரை அங்கு அடிக்கடி பார்க்க முடியும். ஆனால் கடந்த சில நாட்களாக அரசியல் ரீதியாக தன்னுடைய ஆதரவாளர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் யாரையும் தனது சேம்பரில் ஓபிஎஸ் அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அப்படியே வந்தாலும் கூட அரசியல் தொடர்பான பேச்சு என்றால் அதில் ஆர்வம் காட்டாமல் ஓபிஎஸ் ஒதுங்கியிருப்பதாக கூறுகிறார்கள். இதனை உணர்ந்து அவரது ஆதரவாளர்களும் அரசியல் தொடர்பாக பேச அவரை சந்திப்பதை தவிர்க்கிறார்களாம்.

இதே போல் நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றிலும் ஓபிஎஸ் கவனம் செலுத்தவில்லை என்கிறார்கள். அதே சமயம் தனது நிதித்துறை சார்ந்த திட்டங்கள், வீட்டு வசதி வாரியம் தொடர்பான விவகாரங்கள் என்றால் கட்சிக்காரர்களுக்கு உடனடியாக பேச அனுமதி கிடைப்பதாக சொல்கிறார்கள். மேலும் துறை ரீதியிலான கோரிக்கைகளுடன் வருபவர்களுக்கு உடனுக்குடன் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை ஓபிஎஸ் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். இப்படி கட்சி விவகாரங்களில் ஒதுங்கிய ஓபிஎஸ் ஆட்சி விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதாது முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் போக்கிற்கு செல்ல அவர்களை அனுமதித்துவிடுவது என்கிற முடிவில் ஓபிஎஸ் இருக்கிறார் என்கிறார்கள். மேலும் தேர்தல் சமயத்தில் தனது ஆதரவாளர்களுக்கு கணிசமான எண்ணிக்கையில் சீட் தருவதாக எடப்பாடி தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் அதுவரை அவர்களுக்கு இடையூறாக எதையும் செய்ய வேண்டாம் என்று ஓபிஎஸ் நினைப்பதாக கூறுகிறார்கள். மேலும் தற்போது அரசியர் ரீதியாக தான் எதையாவது செய்தால் அது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும்அதனை ஓபிஎஸ்சே விரும்பவில்லை என்கிறார்கள்.

மேலும் மகன் ரவீந்திரநாத் அண்மையில் மொரிசியஸ், மாலத்தீவு, பிரான்ஸ் சென்று வந்ததை மத்திய உள்துறையுடன் மாநில உள்துறையும் கண்காணித்துள்ள நிலையில் அதன் மூலமாக வரும் நெருக்கடிகளை சமாளிக்கவே அரசியல் தொடர்பான நகர்வுகளை ஓபிஎஸ் தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தனது ஆதரவாளர்களுக்கு சீட் மற்றும் பிரச்சாரம் என்பதோடு ஒதுங்கிக் கொண்டு தேர்தலுக்கு பிறகு அரசியல் களத்தில் ஆட்டம் காட்டலாம் என்பது தான் ஓபிஎஸ்சின் வியூகம் என்கிறார்கள்.

click me!