எடப்பாடியின் திடீர் விஸ்வரூபம்.. அமித் ஷா அப்செட்.. ஆளுநர் டெல்லி விரைந்ததன் பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Nov 5, 2020, 10:36 AM IST
Highlights

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7 புள்ளி ஐந்து சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராகவும் ஆளுநரை ஓரம்கட்டியும் எடப்பாடி பழனிசாமி செய்த அரசியல் அமித் ஷாவை அப்செட்டாக்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7 புள்ளி ஐந்து சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராகவும் ஆளுநரை ஓரம்கட்டியும் எடப்பாடி பழனிசாமி செய்த அரசியல் அமித் ஷாவை அப்செட்டாக்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பது தான் பாஜக மேலிடத்தின் எண்ணம். மத்திய அரசின் விருப்பங்கள், ஆசைகள், கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்காமல் இங்கு ஆட்சியை அதிமுக தொடர வேண்டும் என்பது தான் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாம் கண்ட காட்சி. எந்த ஒரு விஷயத்திலும் மத்திய அரசை ஆளும் அதிமுக அரசு எதிர்ப்பதே இல்லை. விவசாயிகள் மசோதா விவகாரத்தில் ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக இருந்தன. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் எந்த மாநில அரசும் அந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆனால் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு அந்த விவசாய சட்டங்களை ஆதரித்தது. அதோடு மட்டும் அல்லாமல் அந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மையே என்று பிரச்சாரமும் அதிமுக அரசு செய்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும்  போதெல்லாம் தான் ஒரு விவசாயி என்றும், மத்திய அரசின் சட்டங்களால் விவசாயிகளுக்கு நிறைய பலன் என்று கூறி பல்வேறு அம்சங்களை அவர் பட்டியலிட்டார். சொல்லப்போனால் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு ஒரு பிராண்ட் அம்பாசிடம் போல அவர் செயல்பட்டார்.

இந்த அளவிற்கு மத்திய அரசை அனுசரித்தே எடப்பாடி அரசு செயல்பட்டு வந்தது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிர் நிலைப்பாடு எடுத்தார். இந்த இரண்டு விவகாரங்களுமே ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டில் வரக்கூடியதாகும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஆளுநர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதே போல் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரத்திலும் ஆளுநர் தமிழக அரசின் மனநிலைக்கு எதிரான மனநிலையிலேயே இருந்தார்.

அதே சமயம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் விவகாரத்தில் ஆட்சேபனை இல்லை என்று டெல்லியில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் அதற்கான கிரடிட்டை யார் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக இப்படி ஒரு முடிவை எடுத்து சட்டத்தை இயற்றிய நிலையிலும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டபலரும் ஆளுநரை இந்த விஷயத்தில் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தனர்.

அதாவது ஆளுநர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் அதற்கான கிரடிட்டை பெற பாஜகவும் களம் இறங்கியது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு ஒரு நாளைக்கு முன்னரே தனது பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தால் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் இந்த விவகாரத்தில் முழு கிரடிட்டும் எடப்பாடி பழனிசாமியை வந்து சேர்ந்தது. இது ஆளுநருக்கு மட்டும் அல்ல டெல்லியில் இருந்து தமிழக அரசியல் களத்தை இயக்குபவர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

இதுநாள் வரை தங்களை அனுசரித்து நடந்து வந்த எடப்பாடி பழனிசாமி அரசு திடீரென தங்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் வகையில் நடந்து கொண்டது டெல்லியை எரிச்சலாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். இதனை அடுத்தே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு டெல்லி வருமாறு அழைப்பு சென்றதாக கூறுகிறார்கள். அதுவும் தமிழக அரசியல் களத்தில் பாஜக தனது கிரிப்பை இழந்து வருவதாக அமித் ஷா கருதுகிறார். எனவே ஆளுநர் – அமித் ஷா இடையே நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்கிறார்கள். இனி ஆளுநர் தமிழகத்தில் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் சில நெருக்கடிகளை அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

click me!