
அரசியலுக்கு அப்பாற்பட்டு வெற்றிவேல் எனது நீண்ட கால நண்பர் எனவும் வெற்றிமேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமது உறவினர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதைதொடர்ந்து சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார். இதனால் பெரும் சர்ச்சை எழும்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இளவரசி மகள் கிருஷ்ண்ப்பிரியா நாங்கள் கூறும்போது அதனை வெளியிடாமல், இப்போது அதனை வெளியிடுவது கீழ்த்தரமான செயல் என்றார். டிடிவி தினகரனிடம் கொடுக்கப்பட்ட அந்த வீடியோ வெற்றிவேலிடம் ஏன் போக வேண்டும்? இது பெரிய கேள்வியாக உள்ளது.
அதற்கான பதில் இனிமேல்தான் வெளியாகும் என்றார். வெற்றிவேல் துரோகம் இழைத்திருக்கிறார் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் அரசியலுக்கு அப்பாற்பட்டு வெற்றிவேல் எனது நீண்ட கால நண்பர் எனவும் வெற்றிமேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமது உறவினர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா வீடியோ பொதுவெளிக்கு வருவதை சசிகலாவும் நானும் விரும்பவில்லை எனவும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி கேட்டால் சமர்பிப்பேன் எனவும் தெரிவித்தார்.
தனது இப்போதைய தலைவரான சசிகலா மீது உள்ள கலங்கத்தை துடைக்கவே வெற்றிவேல் விரும்பியுள்ளார் எனவும் நைட்டியில் இருந்ததால் வீடியோவை வெளியிட விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.