
அடுத்தவர்களை அழித்து கட்சியை வளர்க்கவேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணம் எங்களுக்கு இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதைதொடர்ந்து சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார். இதனால் பெரும் சர்ச்சை எழும்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்குவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றும், ஜெயலலிதாவின் மரணத்தையே கீழ்த்தரமாக அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய டிடிவி அடுத்தவர்களை அழித்து கட்சியை வளர்க்கவேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணம் எங்களுக்கு இல்லை எனவும் ஜெயலலிதாவின் வீடியோவை சுயலாபத்திற்காக வெளியிடவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் வீடியோவை வெளியிட்டது கீழ்தரமான அரசியல் என ஸ்டாலின் கூறியது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.