ஓ.பி.எஸ் மகனுடன் போட்டியிட்டது என் தவறான முடிவு... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதங்கம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 25, 2019, 6:21 PM IST
Highlights

ஈரோடு தொகுதி கிடைக்காததால் தேனி தொகுதியில் போட்டியிட்டேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதங்கப்பட்டுள்ளார். 

மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், ‘’மக்களவைத் தேர்தலின்போது, ஈரோடு தொகுதி கிடைக்கவில்லை என்றதும் நான் அமைதியாக இருந்து இருக்க வேண்டும். பதவி ஆசையால் தேனி தொகுதியில் சென்று போட்டியிட்டேன். அங்கு வாக்குக்கு ரூ.2,000 கொடுத்து ரூ.200 கோடி செலவு செய்து, அவர்கள் வெற்றி பெற்று விட்டனர். ஈரோடு மக்களை விட்டுச் சென்றதை தவறு என்று உணர்கிறேன்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த பிரதமர் மோடி, தற்போது மகாராஷ்டிராவின் ஜனநாயகத்தை சீர்குலைக்கிறார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைந்து விட்டது என்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அம்மாநில மக்களால்தான் இருவருக்கும் முடிவு வரும். ஜனநாயகத்தைக் கொலை செய்து மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் இருக்கக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். நாட்டின் முடிசூடா மன்னனாக மோடி வர வேண்டும் என நினைக்கின்றனர்.

ஹிட்லரைப் போன்ற நிலை பிரதமர் மோடிக்கு வரும் என்று நான் சொல்லவில்லை. அதேநேரத்தில் ஹிட்லரின் வரலாறை அவர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லவே விரும்புகிறேன். காஷ்மீரில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் தவிர வேறு யாரும் பேசுவதில்லை. எல்லோருக்கும் மோடி என்றால் பயம். எல்லா நாட்களிலும் அவர்கள் மக்களை ஏமாற்ற முடியாது. இறுதிவரை தொண்டர்களாகிய உங்களோடுதான் இருப்பேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!