
அதிமுகவை மத்தியில் ஆளும் பாஜக, தனத அதிகாரத்தைப் பயன்படுத்தி கொஞ்சம், கொஞ்சமாக கபளீகரம் செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நள்ளிரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன், இந்த கைது விவகாரத்தை வைத்து பார்க்கும் போது சுகேஷை வைத்து தினகரன் பாஜகவால் பழிவாங்கப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது என தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தேஇ அதிமுகவை பாஜக கொஞ்சம், கொஞ்சமாக கபளீகரம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்,
தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைவது பாஜகவின் கைகளில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தவறுகள் யார் செய்திருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறிய முத்தரசன், இப்பிரச்சனை அரசியல் உள்நோக்கத்துடன் இருப்பது போல் தோன்றுகிறது என்றார்,
இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் முத்தரசன் தெரிவித்தார்.