தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியா... சூரப்பா ஆட்சியா...? முத்தரசனுக்கு வந்த சந்தேகம்..!

By Asianet TamilFirst Published Oct 16, 2020, 9:45 PM IST
Highlights

தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா? சூரப்பா ஆட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு செய்யும் துரோகம். பாஜக சமூகநீதிக்கு எதிராக செயல்படும் கட்சி ஆகும். இன்னொரு பக்கம் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. ஆனால், அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. 
அமைச்சரவை நிறைவேற்றும் எந்த தீர்மானத்தையுமே ஆளுநர் ஏற்பதில்லை. இது தமிழக அரசையே அவமதிக்கும் செயல். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சூரத்தனமாக தன்னிச்சையாக செயல்படுகிறார். மாநில அரசை கலந்தாலோசிக்காமல் செயல்படும் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் நடப்பது பழனிசாமி ஆட்சியா? சூரப்பா ஆட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மூன்று விவசாய மசோதாக்கள், மின்சார சட்டத் திருத்தம் என நாட்டு மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது, அதனால் ஏற்படும் இழப்பை மாநில அரசுகளுக்கு தருவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்பாது இழப்பீடை தராமல் மாநில அரசுகள் கடன் வாங்கி கொள்ள அனுமதிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. பாஜக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாநில அரசுகளுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் மத்திய அரசுக்கு மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஆனால், மத்திய அரசு சமூகநீதிக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ளது. அது ஆர்எஸ்எஸ் கொள்கையையே செயல்படுத்தி வருகிறது.
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது. திமுக கூட்டணி கட்சிகள் கொள்கை ரீதியாகக் கூட்டணியை வைத்துள்ளன. திமுக கூட்டணியே சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியைப் பெறும். சில பத்திரிகைகள் கூட்டணியைக் குலைக்க முயற்சி செய்து வருகின்றன. அது நடக்காது.” என்று முத்தரசன் தெரிவித்தார்.
 

click me!