ராம் நாத் கோவிந்த் எவ்வழியோ முர்முவும் அவ்வழியே... பழங்குடிகளுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது... ரவிக்குமார் MP.

Published : Jul 18, 2022, 02:54 PM ISTUpdated : Jul 18, 2022, 03:28 PM IST
 ராம் நாத் கோவிந்த் எவ்வழியோ முர்முவும் அவ்வழியே... பழங்குடிகளுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது... ரவிக்குமார் MP.

சுருக்கம்

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றால் பழங்குடியினருக்கு ஒரு நன்மையும் ஏற்படாது என்றும், அவர் பாஜக என்ற எஜமானருக்கு விசுவாசமாகவே நடந்து கொள்வார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றால் பழங்குடியினருக்கு ஒரு நன்மையும் ஏற்படாது என்றும், அவர் பாஜக என்ற எஜமானருக்கு விசுவாசமாகவே நடந்து கொள்வார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்திற்காக அவர் கொடுத்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:-

கேள்வி:1. திரௌபதி முர்மு ஒரு பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்று பதிவியேற்கும் பட்சத்தில் அவர் சார்ந்த சமூகத்திற்கு  இவரால் என்ன நன்மை ஏற்படும் என எதிர்பார்க்கிறீர்கள்..?

பதில்: திரௌபதி  முர்மு என்பவர் ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல அவர் பாஜக என்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர், ஏற்கனவே கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பதவிகளில் இருந்திருக்கிறார், அவற்றைப் பயன்படுத்தி அந்தப் பழங்குடியினர் சமூகத்திற்கு அவர் என்ன செய்திருக்கிறார் என ஆராய்ந்தோம் என்றால் அதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அவர் ஒரு மாநிலத்தில் ஆளுநராக இருந்தபோது பழங்குடியின மக்களை பாதிக்கின்ற ஒரு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் என்ற குற்றச்சாட்டு முர்முமீது  உள்ளது. எனவே குடியரசுத் தலைவரான பிறகு அவர் பழங்குடியின மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார் என்று அவரது பழைய கால நடவடிக்கைகளை வைத்து நாம் நம்பிக்கை கொள்ள முடியவில்லை.

குடியரசுத்தலைவர் சுதந்திரமாக செயல் முடியும்:-

குடியரசுத் தலைவர் என்பவர் ஆட்சியில் இருப்பவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு கொண்டு நடக்க வேண்டிய தேவை அவசியம் இல்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும், ஒரு குடியரசுத் தலைவர் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று காட்டிய தலைவர்கள் ஏற்கனவே இந்தியாவில் இருந்துள்ளனர்.

குறிப்பாக கே. ஆர் நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பலவற்றை அவர் தடுத்து நிறுத்தினார். அப்போதைய பாஜக ஆட்சியின்போது, அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற முயற்சித்த போது அதைத் தடுத்து நிறுத்திய பெருமை  அவரையே சேரும்.

இதையும் படியுங்கள்: உங்க அலட்சியப் போக்கால் என்ன ஆச்சு பாத்திங்களா.. திமுக அரசை லெப்ட் ரைட் வாங்கிய சசிகலா..!

அதேபோல பல்வேறு மக்கள் விரோத சட்ட மசோதாக்களுக்கும் அவர் ஒப்புதல் அளிக்க மறுத்தார், இது எல்லாவற்றையும் தாண்டி ஆளுநர்கள் கொண்ட ஒரு குழு ஒன்றை அமைத்து, இந்தியா முழுவதும் மாநிலங்களில் எவ்வளவு உபரி நிலங்கள் இருக்கின்றன, அவற்றை பட்டியலின- பழங்குடி மக்களுக்கு பிரித்து தருவதற்கு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பதை  கேட்டறிந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் அப்போது வலியுறுத்தினார், அதன் அடிப்படையில் ஆளுநர்கள் கொடுத்த அறிக்கையை வைத்து, மாநில அரசுகள் அதன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தினார்.

இது இந்தியாவில் இருந்த குடியரசுத் தலைவர்கள் எவரும் செய்யாத ஒன்றாகும், அவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியாக, அம்பேத்கர் அவர்களுடைய வழியில்  வந்தவராக இருந்த காரணத்தினால், சமூகத்தில் மிகவும் நலிவடைந்த, புறக்கணிக்கப்பட்ட உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கு அதிக  அக்கறை செலுத்தினார்.

அத்தகைய அக்கறையை புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத்தலைவர் பின்பற்றினால் உண்மையிலேயே அது பாராட்ட தக்கதாக இருக்கும். ஆனால் அப்படி செய்யக்கூடிய கருத்தியல் தெளிவு, அதுபோன்ற நலிந்த பிரிவினரை பற்றிய அக்கறையோ திரௌபதி முர்முவுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறி தான்

கேள்வி : 2. திரவுபதி முர்முவினுடைய செயல்பாடுகளில் மாற்றம் வரும் என  எதிர்பார்க்கிறீர்களா? நம்புகிறீர்களா..?

பதில்: ஒரு குடியரசுத் தலைவர் எப்படி இருக்கவேண்டுமென்று ஆளுங்கட்சியினர் சிந்தித்து அதற்கு ஏற்ப தான் இவரை தங்களது வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள், எனவே அவரை யார் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாகத்தான் அவர் இருப்பார் என்பதுதான் எல்லோரும் தெரிவிக்கிற கருத்து. 

இதையும் படியுங்கள்: சேரி மக்கள் அப்படித்தான் என பேசி சர்ச்சையில் சிக்கிய பிரிகிடா! எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்புகேட்ட பார்த்திபன்

ஏனென்றால் இதற்கு முன்பு குடியரசுத் தலைவராக இருந்து பதவி ஓய்வு பெறுகின்ற ராம்நாத் கோவிந்த் அவர்கள் அவருடைய பதவி காலத்திலே பட்டியல் இன மக்களுக்காக எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை, இன்னும் சொல்லப்போனால் கடந்த 5, 6 ஆண்டுகளில்  தான் பட்டியலின மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள், அவர்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடந்தது, இது மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் அவற்றை தடுத்து நிறுத்தவோ இத்தகைய வன்கொடுமைகளை குறைக்கஙவோ குடியரசுத் தலைவர் தன்னளவில் எந்த ஒரு முயற்சியை மேற்கொண்டது இல்லை, அவர் எப்படி பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவராக இருந்து கொண்டு அந்த மக்களுக்கு எதையுமே செய்யாமல் தன்னுடைய பதவிக் காலத்தை முடிக்கிறாரோ

அப்படித்தான் பழங்குடியினர் சமூகத்தினருக்கும் எதுவும் செய்யாமல், தன்னுடைய பதவிக் காலத்தை, தன்னை வேட்பாளராக நிறுத்திய ஆட்சியாளர்களுக்கு உகந்த விதத்தில் முடிக்கப் போகிறார் முர்மு என்ற எண்ணம்தான்  பரவலாக இருக்கிறது. அதுதான் நடக்கப்போகிறது. இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!