2001-ல் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு... 2021-ல் நாராயண் ரானே... மாநில போலீஸாரால் கைதான மத்திய அமைச்சர்கள்.!

By Asianet TamilFirst Published Aug 24, 2021, 9:40 PM IST
Highlights

20 ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டுள்ளார்.
 

இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தையே மறந்துவிட்ட முதல்வர் உத்தவ் தாக்கரே அருகே நான் இருந்திருந்தால் அறைந்திருப்பேன் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் பாஜக - சிவசேனா கட்சி தொண்டர்கள் இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதற்கிடையே மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், நாராயண் ரானே மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 
இதற்கிடையே தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சர் நாராயண் ரானே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்  நாராயண் ரானேவை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்தனர். இதனால், மகாராஷ்டிராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநில போலீஸார் மத்திய அமைச்சரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
2001-இல் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை மேம்பால ஊழல் வழக்கில் போலீஸார் வீடு புகுந்து இழுத்துச் சென்றது பெரும் சர்ச்சையானது. இந்த வழக்கின்போது போலீஸாருடன் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்போது முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மத்திய அமைச்சர்களின் இந்த கைது சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. அன்றைய பிரதமர் வாஜ்பாய் உத்தரவின் பேரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் உடனே சென்னை வந்தார். சிறையில் இருந்த கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை சந்தித்து பேசினார்.


இந்த வழக்கில் சில தினங்களில் உயர் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஜாமீன் பெற்றனர். அந்த நிகழ்வுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போது மத்திய அமைச்சர் நாராயண் ரானே மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் ஒற்றுமையான விஷயம் என்னவெனில், அப்போதும் இப்போதும் கைதான மத்திய அமைச்சர்கள் இருந்தது, இருப்பது பாஜக கூட்டணி ஆட்சியில்தான்.

click me!