
தஞ்சாவூரில் சசிகலாவின் கணவர் நடராஜன் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர் கலை இலக்கிய திருவிழா மூன்று நாள் நடத்துவது வழக்கம்.
இந்த முறை தஞ்சை தமிழ் சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் தமிழர் கலை இலக்கிய பொங்கல் விழா தஞ்சையில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய சசிகலாவுன் சகோதரரும், மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளை நிறுவனருமான திவாகரன் கலந்து கொண்டார்.
இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி விழா தொடங்கியது.தென்னிந்தியாவிற்கான ரஷ்யதூதர் செர்ஜி கோட்தோ, கிருஷ்ண மோகன்ஜி, கேப்டன் அருண்சக்கரவர்த்தி, ம. நடராஜன், திவாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
அதனைத்தொடர்ந்து விழாவுக்கு தலைமையேற்று திவாகரன் பேசியதாவது முறைப்படி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டிருக்கிறது. சிறு நெருடலுடன், ஏன்? பெரு நெருடலுடன் நடந்துகொண்டிருக்கிறது.
நம்முடைய புரட்சித்தலைவி நம்மைவிட்டு சென்றுவிட்டார்கள், அரசியல் களம் கொந்தளிக்கிறது. ஜனவரியில் அரசாங்கம் மாறிவிடும், கேபினெட் அமைத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு அம்மாவின் அரசாங்கம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. சரித்திரத்தில், தஞ்சாவூர்க்கு மிகப்பெரிய பங்கு உண்டு. புரட்சித்தலைவர் இந்த கட்சியை துவங்கும்போது, இந்தபகுதியில் மிகப்பெரிய பங்காற்றியவர் எஸ்.டி.எஸ். அதையும் யாரும் மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது, அந்த நன்றியை யாரும் மறக்கக்கூடாது.
எந்த நேரத்தில் யார் உதவி செய்திருந்தாலும் அதை மறக்கக் கூடாது. மறந்தால் அது உண்மையான தமிழனுக்கு அழகல்ல.
அப்போது திண்டுக்கல் தேர்தலை ஒரத்தாடு, மன்னார்குடி தொண்டர்களை வைத்துதான் நடத்தினார் எஸ்.டி.எஸ். ஆகையால், நாங்கள் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது.
இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல. இப்போதும் எவ்வளவோ சதிகள் நடந்துகொண்டிருக்கிறது. எப்படியும் உடைத்துவிடலாம், ஏதாவது செய்து விடலாம் என பல சதிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அப்படி எது நடந்தாலும் எங்கள் சடலத்தின் மீது தான் நடக்கும்.
2011ம் ஆண்டில் மிகப்பெரிய சதி நடந்தது. அம்மாவைவிட்டு எங்களையெல்லாம் நகர்த்தினால் போதுமென்று நினைத்தார்கள் அது நடக்கவில்லை. நடக்கவும் நடக்காது. எது செய்தாலும் திறந்த மனநிலையில்தான் செய்துவருகிறோம்.
புரட்சித்தலைவருக்கு பிறகு அ.தி.மு.க.வை கட்டிக்காத்ததில் மிகப்பெரிய பங்கு நமக்கு உண்டு, அதுவும் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தினருக்கு உண்டு.
அதில் மிகப்பெரிய பங்கு நடராஜனுக்கு உண்டு. அதை எல்லோரும் மறந்து இருக்கலாம். ஆனால் நான் மறக்கமாட்டேன். ஏனென்றால், நானும் அவரும் இணைந்து செயல்பட்டிருக்கிறோம்.
எங்கள் உயிர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுத்தார். அதையெல்லாம் துச்சமென மதித்து கட்சியை கைப்பற்றினோம். அப்போது இரட்டை இலை முடக்கப்பட்டது. இரட்டை இலையை மீட்டெடுத்த பெருமை நடராஜனுக்கு மட்டும் தான் உண்டு.
தற்போது இருக்கின்ற இளைஞர்களுக்கு எங்கள் வரலாறு எல்லாம் தெரியாது. இந்திய அளவில் முடங்கிய சின்னம் மீண்டும் வந்ததாக சரித்திரம் இல்லை. அப்போது நடராஜன் உழைத்து உழைப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்.
ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரட்டை இலை சின்னத்தை வாங்கினார். அதன் பின்பு நடைபெற்ற மதுரை, மருங்காபுரி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றோம்.
அதற்கு தளபதியாக செயல்பட்டவர் நடராஜன் மட்டும் தான். எந்தவிதமான எதிர்ப்புகளை பார்க்காமல் தலைவர் வளர்த்த கழகம், அம்மா ஆசைப்படி கழகத்தை நூற்றாண்டுகளுக்கு மேல் வழிநடத்த வேண்டும். நமக்கு கடுமையான காலகட்டம் என்று தான் கூற வேண்டும்.
அ.தி.மு.க.வுக்கும் பொதுச்செயலாளர், எங்களை போன்றவர்களுக்கு நிறைய மிரட்டல் இருக்கிறது. நாம்தான் எப்போதும்போல, அ.தி.மு.க. ஆரம்பித்திலிருந்தே காத்து வருகிறோம்.
அதே மாதிரி இப்போதும் காக்க வேண்டும், ஒன்றாக இருந்து ஒரு நல்ல தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.இந்தியாவை பொறுத்தவரை தமிழர்கள் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறோம்.
இந்தியாவை ஆள்வதற்கு ஒரு முகர்ஜியோ, குப்தாதான் வருகிறார்கள். 40 எம்.பி.யை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம் ?. இரண்டாம் பட்ச குடிமக்களாகத்தான் இருக்கிறோம்.
புயல் அடித்து ஒருவாரம் கழித்துதான் மத்திய குழுவினர் வருகிறார்கள், காவிரி பிரச்னையில் பின்வாங்குகிறார் பிரதமர் மோடி. புயல் நிவாரணம் இன்னும் வரவில்லை.ஜல்லிக்கட்டை தடையை மீறி அனுமதித்தால் அரசாங்கத்தை கலைத்துவிடுவோம் என சொல்கிறார்கள்.
கர்நாடக அரசும் உச்சநீதிமன்றமும் சொல்லியும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கலைக்க மறுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை அனுமதித்தால் கலைத்துவிடுவதாக சொல்லுகிறார்கள்.
எனவே நாம்தான் ஒன்றுமையுடன் இருந்து இவர்களை வேரறுக்க வேண்டுமென ஆவேசமாக பேசினார்.
அப்பகுதி முழுவதும் 'செம்மன செம்மல்' 'அரசியல் சதுரங்கத்தின் கிங் மேக்கர்' என நடராஜனை வாழ்த்தி ஃபிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதுவரை இல்லாத வகையில் சசிகலாவின் படமும் ஃபிளக்ஸில் இடம்பெற்றிருந்தது.
வழக்கமாக விளம்பரங்களில் மட்டும் இடம்பெறும் சசிகலாவின் சகோதரர் திவாகன் தற்போது பேசியிருப்பது அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா ஆகிவிட்ட காரணத்தாலே மன்னார்குடி குடும்பத்துக்குதான் அதிமுக சொந்தம் என்பது போல அக்கட்சியில் உள்ள எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகளை அதிர்ச்சியடைய வைத்தும் அதிமுகவின் தொடக்க காலம் முதலே கட்சியை பாதுகாத்ததில் தங்களுக்கு அதிக பங்கு உள்ளதாகவும், அவர் கூறிய கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக நடக்கும் விழாவில் நடராஜன் பேச உள்ளார்.