ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பம் சொத்து சேத்துட்டாங்க..! போட்டு உடைத்த முனுசாமி..!

First Published Nov 12, 2017, 11:45 AM IST
Highlights
munusamy blames sasikala and her family


ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலாவின் குடும்பம் சொத்து சேர்த்துவிட்டதாகவும் காந்தியின் பெயரை சொல்லக்கூட தினகரனுக்கு தகுதியில்லை எனவும் கே.பி.முனுசாமி கடுமையாக சாடியுள்ளார்.

போலி நிறுவனங்கள் தொடங்கி நஷ்ட கணக்கு காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்ததாக, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

நான்காவது நாளாக இன்றும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை தொடங்கிய முதல் நாளன்று 187 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல இடங்களில் சோதனை நிறைவடைந்துவிட்ட நிலையில், ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், விவேக் வீடு, கிருஷ்ணப்பிரியா வீடு, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் சோதனை நடந்துவருகிறது.

இந்த சோதனையில் இதுவரை 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்த 1000 கோடி ரூபாய் பணத்திற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி.முனுசாமி கூறியதாவது:

தனக்கு உதவிபுரிவதற்காக சசிகலாவை ஜெயலலிதா உடன் வைத்திருந்தார். ஆனால் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நல்லவர்கள் போல் நடித்து ஜெயலலிதாவின் ஆட்சியின் பலனை சுவைத்து இருக்கிறார்கள்.

தவறு செய்தவர்கள் என்றாவது ஒருநாள் சிக்குவார்கள். தர்மத்திற்கான சரியான நேரம் வந்துவிட்டது என்பது இப்போது நிரூபணமாகிறது. காந்தியின் பேரன் இல்லை என தினகரன் கூறியிருக்கிறார். காந்தியின் பெயரை சொல்லக்கூட தினகரனுக்கு தகுதியில்லை.

இவ்வாறு சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தை விமர்சித்து கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.
 

click me!