பாஜகவை சாதாரணமாக எதிர்க்க முடியாது.. வியூகம் சொல்கிறார் ப.சிதம்பரம்..!

First Published Nov 12, 2017, 11:08 AM IST
Highlights
p chidambaram strategy to oppose bjp


தற்போதைய பாஜகவை எதிர்த்து போராட போர்க்குணம் கொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மரகதம் சந்திரசேகரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவை ஆளும் அளவுக்கு பாஜக வளர்ந்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால் காங்கிரஸைப் போன்ற பெருமை பாஜகவுக்கு கிடையாது.
 
பாஜகவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தலைவர்களாக இருக்கிறார்களா? கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உயர் பொறுப்பில் இருக்கிறார்களா? இந்து மக்கள் மட்டும் தான் இந்தியா என்று நினைக்கும் கட்சி பாஜக. அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் கட்சி என்றால் அது காங்கிரஸ் தான். மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அதை பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்று வருகிறது. 

நிதானமான தலைவர்கள் உருவாக வேண்டும். நிதானமான தலைவர்கள் போர்க்குரல் எழுப்ப வேண்டும். வாஜ்பாய், அத்வானி இருந்த பாஜக வேறு. தற்போது இருக்கும் பாஜக வேறு. இப்போது இருக்கும் பாஜக எந்த அரசியல் நெறிகளையும் கடைப்பிடிப்பதில்லை. 

தற்போதைய பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் போராட வேண்டும் என்றால் நமக்கு போர்க்குணம் வர வேண்டும். போர்க்குணம் கொண்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். இந்த இளைஞர்கள் கூட்டம் அனைத்து சமுதாயத்தில் இருந்தும் வர வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசினார்.

இவ்வாறு பாஜகவை கடுமையாக சாடிய ப.சிதம்பரம், பாஜகவை எதிர்த்து போராட போர்க்குணம் கொண்ட இளைஞர்களை அனைத்து சமுதாயத்திலிருந்தும் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
 

click me!