
ஆர்.கே.நகர் தேர்தல் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், இன்றே வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி என்பதால், பலரும் முண்டிக் கொண்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், கடைசி நாளான இன்று, சுயேட்சைகள் பெருவாரியாகக் களத்தில் உள்ளனர். இன்று 46க்கும் மேற்பட்டோர் சுயேட்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் காலையிலேயே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
குறிப்பாக, நடிகர் விஷால் திடீரென தானும் போட்டியிடப் போவதாகக் கூறி, காலையில் இருந்தே ஒவ்வொரு சிலைக்கும் சென்று மாலை அணிவித்து, அரசியல் வாதி என்ற எண்ணத்தை பிரதிபலித்துக் கொண்டார். காமராஜர் சிலை, சிவாஜி சிலை, எம்.ஜி.ஆர். சமாதி, ஜெயலலிதா நினைவிடம் என மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஒவ்வொரு இடமாக விட்டு விட்டு நகர்ந்து, மெதுவாகத்தான் மனுத் தாக்கல் செய்ய வந்தார்.
இதனிடையே, இன்று ஒரே நாளில் பலர் வேட்பு மனு தாக்கல் செய்யக் குவிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஷாலுக்கு சிறப்பு அந்தஸ்து எல்லாம் கொடுக்கக் கூடாது, அவரும் எங்களைப் போல் சுயேட்சைதான் என்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர் பலர். இதனால் விஷால், தீபா உள்ளிட்டோரையும் வரிசையில் நிற்க வைத்து, டோக்கன் வழங்கி, பின்னர் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று விஷால் மனு தாக்கல் செய்தார். ஆனால், விஷால் அரசியல் பின்னணியுடன் இறங்குகிறார் என்று கூறப்பட்டது. இதனால், பிரதான எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி அதிமுக., ஆகியவை, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளன என்று தெரிகிறது. ஏற்கெனவே நடிகர் சங்கத்திலும் இயக்குனர்களிடமும் அதிருப்தியும், சச்சரவும் விஷாலின் போட்டி முடிவால் ஏற்பட்டுவிட்டன. இந்த நிலையில், வழக்கமான தேர்தல் கால குயுக்திகளின் அடிப்படையில், தினகரன், விஷால், தீபா என்ற பெயர் கொண்டவர்கள் அதிகம் பேர், இன்று சுயேட்சையாக மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று கோஷமிட்டு, போலி வாக்காளர்கள் களையப் படக் காரணமாக இருந்த திமுக., உள்ளிட்ட கட்சிகள், இப்போது, போலி வேட்பாளர்களைக் களம் இறக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது.
பார்ப்போம்... எத்தனை தினகரன், எத்தனை விஷால், எத்தனை தீபா போட்டியிடப் போகிறார்கள் என்று!