
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவதையொட்டி, “அவுரங்கசீப் ராஜ்ஜியத்துக்கு வாழ்த்துக்கள்” என்று பிரதமர் மோடி நையாண்டி செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு எவரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில் அவரே தலைவராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில், ராகுல்காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி செயல்படப் போவது குறித்து பிரதமர் மோடி நையாண்டி செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின், வல்சத் மாவட்டத்தில், தரம்பூர் நகரில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர்ம மோடி இன்று காலை பேசினார். அப்போது, அவர் பேசுகையில், “ காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி தலைவராகப் போகிறார். முகலாயப் பேரரரசில் ஜகாங்கீருக்கு பின் ஷாஜகான் பதவி ஏற்றார், ஷாஜகானுக்கு பின், அவுரங்கசீப் மன்னராகப் பதவி ஏற்றார். அங்கே ஏதாவது தேர்தல் ஏதும் நடத்தப்பட்டதா.
இது அனைவருக்கும் தெரிந்து தானே. அடுத்து யார் ஆட்சி செய்வார், தந்தையை ஆட்சியில் இருந்து அகற்றி மகன் ஆட்சிக்கு வருவது எல்லாம் இயல்புதான். அதுபோல இப்போது அவுரங்கசீப் ராஜ்ஜியத்துக்கு காங்கிரஸ் தயாராகிறது. வாழ்த்துக்கள். மக்கள் விஷயங்களிலும், 125கோடிமக்கள் நலனிலும் அக்கறை கொள்வீர்கள் என நம்புகிறேன்.” என்று காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை நையாண்டி செய்தார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “ காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு சுமையாக இருந்து வந்தது. இப்போது ராகுல்காந்தி அந்த கட்சிக்கு தலைவராக பதவி ஏற்கும்போது நாட்டுக்கு அந்த சுமை நீங்கப்போகிறது. ஏனென்றால் கட்சியே இருக்காது” என்று விமர்சித்துள்ளார்.
இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் விடுத்த அறிக்கையில், “ ராகுலையும், முகலாயர்களையும் ஒப்பிடாதீர்கள். முகலாயப்பேரரசில் தந்தைக்கு பின் மகன், ஜஹாங்கிருக்கு பின் ஷாஜகான், அதன்பின், அவுரங்கசீப் என்று வந்தார்கள். ஆனால், யாரும் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி தலைவர் தேர்வுசெய்யப்படுகிறார்” எனத் தெரிவித்தார்.