மோடி காலால் இட்ட கட்டளையை எடப்பாடி தலையால் செய்து முடித்திருக்கிறார் -  எதை சொல்கிறார் வைகோ...

First Published Apr 2, 2018, 9:17 AM IST
Highlights
Modi order in foot edappadi done in head vaiko smashed


மதுரை

நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய வாய்ப்பில்லாமல் செய்துவிடலாம் என்று நரேந்திர மோடி காலால் இட்ட கட்டளையை எடப்பாடி அரசு தலையால் செய்து முடித்திருக்கிறது என்று வைகோ கூறினார்.

தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கினார். 

இதன் தொடக்க விழா மதுரை பழங்காநத்தத்தில் நடைப்பெற்றது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைப் பயணத்தை தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில் நேற்று அவர் இரண்டாவது நாளாக மதுரை மாவட்டம், செக்கானூரணியில் இருந்து நடைப் பயணமாக புறப்பட்டார். வழிநெடுகிலும் அவர் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு குரல் எழுப்பினார். பின்னர் அவர் நேற்று மாலை உசிலம்பட்டியை வந்தடைந்தார். பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் வைகோ, "தேனி மாவட்டம் போடி அருகே நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதனையும் மீறி இந்த ஆய்வு திட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

வெளிநாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அணுக் கழிவுகளை தேனியில் தேக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் விளைநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலை தமிழகத்தில் மட்டுமின்றி குஜராத்திலும் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி அங்கு அமைக்காமல் நமது தேனி மாவட்டத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். 

தமிழகத்திற்கு இது ஒரு அபாயகரமான காலம். ஒரு பக்கம் மோடி தமிழகத்தை அழிக்க நினைக்கிறார், அதற்கு தமிழக அரசு சாதகமாக செயல்படுகிறது. 

நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய வாய்ப்பில்லாமல் செய்துவிடலாம் என்று நரேந்திர மோடி காலால் இட்ட கட்டளையை எடப்பாடி அரசின் கீழே இருக்கக் கூடியவர்களும், எம்.பி.க்களும் தலையால் செய்து முடித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத மானக்கேடு, வெட்கக்கேடு.

கேரள எல்லை ஓரத்தில் உள்ள போடி பகுதியில் நியூட்ரினோ திட்டம் அமைப்பதால் இரண்டு மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினர் நம்முடன் சேர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால்,  தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினர் இதற்காக குரல் கொடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்" என்று அவர் கூறினார்.

click me!