காவிரி வழக்கை சுயலாபத்திற்காக கருணாநிதி திரும்ப வாங்கினாரே, அதுக்கு என்ன சொல்றீங்க  மிஸ்டர் தளபதி - தமிழிசை கேள்வி...

First Published Apr 2, 2018, 8:58 AM IST
Highlights
Karunanidhi vapus Cauvery case for selfish answer stalin - Tamilisai question?


கிருஷ்ணகிரி

காவிரி வழக்கை தங்களது சுயலாபத்திற்காக திரும்ப வாங்கியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பா.ஜ.க-வின் மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இதில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜ், முன்னாள் எம்.பி. நரசிம்மன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.  

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில், "காவிரி நதிநீர் விவகாரத்தில் பா.ஜனதா துரோகம் செய்யவில்லை. துரோகம் செய்தது காங்கிரசு, தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள்தான். 

மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிக் கூட்டத்தை முடித்துவிட்டு அறிவிக்கப்படாத, ஆர்ப்பாட்டத்தை நடத்தி கைதாகி இருக்கிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்படைய அவர் உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்கிறார். 

தமிழக மக்களுக்கு எந்த விதத்திலாவது பாதிப்பு ஏற்பட்டால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தால் அதற்கு மு.க.ஸ்டாலின் மட்டுமே முழு பொறுப்பேற்க வேண்டும்.

காவிரிக்கு அவர்கள் தியாகம் செய்யவில்லை. மாறாக துரோகம்தான் செய்துள்ளனர். 1974-ல் உச்ச நீதிமன்றத்தின் காவிரி வழக்கை தங்களது சுயலாபத்திற்காக திரும்ப வாங்கியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். 

அதேபோல பத்து ஆண்டுகள் மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரசு ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி பிரச்சனை உச்சத்தில் இருந்தது. காவிரி மீது கவனம் செலுத்தாததற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் என அறிவித்த உடன் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தமிழக எல்லையை முற்றுகையிடுவோம் என கூறுகிறார்கள். இந்த விடயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். 

கர்நாடகாவில் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், மிகப்பெரிய பிரச்சனை வரும். அதற்கு பா.ஜனதா தான் பொறுப்பு என்கிறார்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால், நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். அவர் அண்ணா, பெரியார் வழியில் நடக்கிறாரா? என பார்த்தோம். ஆனால் அவர் அ.தி.மு.க. வழியில்தான் நடக்கிறார். 

காவிரி மேலாண்மை வாரியம் என்றால் மாநிலங்களில் உள்ள அணைகள் முழுவதும் வாரியத்தின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். தமிழகமே இதற்கு ஒத்து கொள்ளாது. அதற்காக தான் நீரை மட்டுமே பங்கிடும் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லி இருந்தது. 

தமிழகம் கூட அணைகளின் உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. காங்கிரசு, தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளால் மறுக்கப்பட்ட காவிரி பிரச்சனைக்கு, திருமாவளவன், வைகோ, அன்புமணி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அழுத்தம் கொடுக்காத காவிரி விவகாரத்திற்கு, பா.ஜனதா துணையோடு உரிமையை பெற்று தருவோம். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என கேட்கிறாம்.

காவிரி விவகாரத்தில் கொடுக்கப்படும் தீர்வு நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகா மேல்முறையீடு செய்யும். அதற்காக பா.ஜனதா நிரந்தர தீர்வு காண வேண்டும் என நினைக்கிறது. 

தெளிவான இலக்கை நோக்கி பா.ஜனதா சென்று கொண்டிருக்கிறது. இதை விரும்பாமல், இதற்கு தீர்வு கொண்டு வந்துவிட கூடாது என்பதற்காக ஸ்டாலின் சூழ்ச்சி செய்கிறார்.

ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு கமல் தூத்துக்குடிக்கும், நியூட்ரினோ பிரச்சனைக்கு வைகோ நடைபயணம் என தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்கவே நினைக்கின்றனர். 

பா.ஜனதா தமிழகத்தை அமைதி பூங்காவாக, வளர்ச்சி திட்டங்கள் நோக்கி செயல்படுத்த நினைக்கிறது" என்று அவர் கூறினார்.
 

click me!