
வேலூர்
தமிழர்கள் சுகாதாரமாக வாழவே பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் வேலூர் மாவட்டம், மண்டித் தெருவில், மத்திய அரசின் நான்கு ஆண்டுகள் கால சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநில வணிகப் பிரிவுத் தலைவர் ராஜகண்ணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் தசரதன் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார் அப்போது அவர் பேசியது:
"தமிழகத்தில் நேர்மறை அரசியலை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், தமிழகத்தில் எதிர்மறை அரசியல் தலைத் தூக்கியுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இனிப்பான செய்து வந்துள்ளது. தமிழர்கள் சுகாதாரமாக வாழ பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளார். ஆனால், எந்த வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என இங்குள்ள சிலர் செயல்படுகின்றனர்.
பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் அதிகப்படியாக தமிழகத்துக்குத் தான் ரூ. 2600 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு 24 சதவீதம் பால் உற்பத்தி அதிகரித்து வெண்மை புரட்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை வந்தால் சென்னையிலிருந்து சேலத்துக்குச் செல்ல மூன்று மணி நேரம் தான் ஆகும். அந்த பாதை வரும் வழியெல்லாம் வளர்ச்சி பெறும்.
விவசாயம் பாதிக்கும் என்றால் அந்த திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்லாது. 8 வழிச் சாலை வந்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும்.
ஆனால், சுயநலத்துக்காக இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர். வளர்ச்சியை தடுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் குழப்பம் விளைவிப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலர் கரு.நாகராஜன், கோட்டப் பொறுப்பாளர் பிரகாஷ், மாநில வணிகப் பிரிவு செயலர் இளங்கோ, மேற்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.