
குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கோரி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டன.
பாஜக தரப்பில் அமைக்கப்பட்ட ராஜ்நாத்சிங், வெங்கையாநாயுடு, அருண்ஜெட்லி ஆகிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் பல முறை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கோரினார்.
இதேபோல், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரிடமும் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரினார்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர நாயுடு ஆகியோர், பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடமும் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் ஆதரவு கோரியுள்ளார்.