
சென்னை ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பணம் விநியோகித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது தமிழகத்திற்கே தலைகுனிவு என்றும், இது போன்ற ஒரு குற்றச்சாட்டுக்கு ஒரு முதலமைச்சர் ஆளாவது இதுவே முதல்முறை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருந்த ஆர்,கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய 32 இடங்களில் வருமானவரி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக கட்சியின் பல்வேறு தலைவர்களிடம் 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பணம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மூலமாக வழங்கப்பட்டது என்பதும் தெரியவந்ததது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்த அவர்களை கைது செய்ய காவல் துறை தவறிவிட்டது என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இப்பிரச்சனையில் தேர்தல் ஆணையமும் தனது கடமையை செய்ய தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக ஆளுனருக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகவே, அந்த வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.