
வித்யாசாகர் ராவ் எனும் பொறுப்பு கவர்னர் புறப்பட்டு சென்ற பின் நெருப்பு கவர்னராய் வந்தமர்ந்தார் பன்வாரிலால் புரோகித். இவரிடம் தமிழகம் எவ்வளவோ அதிரடிகளை எதிர்பார்த்தது. இவரும் வந்த புதிதில் மாவட்ட ஆய்வு கூட்டம், கள ஆய்வு! என்று பின்னிப் பேர்த்தெடுத்தார்.
அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு தன் செயல்பாடுகளின் மூலமாக ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்துக் கொண்டிருந்த கவர்னருக்கு, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் விவகாரத்தின் மூலம் விழுந்தது மெகா ட்விஸ்ட்டு.
காலேஜ் பொண்ணுங்களை ‘அதாவது கண்ணுங்களா, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க!’ என்று ஆபாச வேலைக்கு ஆள் பிடித்து பேசிய விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலாலின் தலையும் உருட்டப்படுகிறது. ‘தாத்தா’ என்று நிம்மி மேடம் லீக் செய்த விஷயத்தில் தாறுமாறாக தடுமாறி விழுந்துவிட்டது கவர்னரின் கெளரவம்.
இதனால் சட்டென்று பிரஸ்மீட் ஒன்றை நடத்தியவர், நிர்மலா தேவி விவகாரத்தில் எடுக்கப்பட்டு வரும் விசாரணை நடவடிக்கைகள் பற்றிப் பேசினார். இதோடு பஞ்சாயத்து முடிந்துவிடும் என்று கவர்னர் நினைக்க, நடப்பதோ வேறு கதை. அதாவது பிரஸ் மீட் நடத்தும் முன்னதாக டெல்லியின் அனுமதியைப் பெறவில்லையாம் கவர்னர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முக்கிய அதிகார மையங்கள் கவர்னர் பன்வாரி மீது மானாவாரியாக கோபத்திலிருக்கிறார்கள்.
தன் மீதான கோபத்தை புரிந்து கொண்ட தமிழக கவர்னர், டெல்லிக்கு விளக்கத்துக்கு மேல் விளக்க கடிதம் எழுதி தள்ளியிருக்கிறார். ஆனாலும் சூழல் சமாதானமாகாத காரணத்தால் வெறுத்துவிட்டார் மனிதர்.
தான் எழுதியிருக்கும் கடிதத்தில் ’என் மீது எந்த தவறுமில்லை. அதை நிரூபிக்கவே உடனடியாக விசாரணை கமிஷனை அமைத்தேன். அந்த கமிஷனின் ரிப்போர்ட் உலகத்துக்கு உண்மையை சொல்லும்.’ என்று விளக்கியுள்ளாராம்.
ஆக விசாரணை அதிகாரி சந்தானம் அளிக்கப்போகும் ரிப்போர்ட்தான் கவர்னரின் கெளரவத்தை முடிவு செய்யும். இந்த ரிப்போர்ட்டின் முடிவு பொதுமக்களின் கவனத்துக்கு வராமல் போகலாம், ஆனால் பிரதமரின் பார்வைக்கு நிச்சயம் போகும். அதன் பிறகே பன்வாரிலாலிடம் பிரதமர் நடந்து கொள்ளும் முறையை வைத்து கவர்னர் மீதான கால்குலேசன்கள் அலசப்படும்.