தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு மோடி - எடப்பாடி என்ற இரட்டை இன்ஜின் வேணும்... பாஜக தலைவர் தாறுமாறு...!

By Asianet TamilFirst Published Mar 29, 2021, 9:16 PM IST
Highlights

தமிழ்நாடு முன்னேற வேண்டுமென்றால் பிரதமர் நரேந்திர மோடி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ற இரட்டை இன்ஜின் தேவை என்று தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளளார்.
 

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பாஜக தமிழகப் பொறுப்பாளரும் அகில இந்திய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தினந்தோறும் பொய்களைக் கூறி வருகிறார். உண்மையில் மு.க.ஸ்டாலின் ஆத்திகரா அல்லது நாத்திகரா என்பதை பொதுமக்களிடம் விளக்க வேண்டும். இந்து கடவுள்களை மட்டுமே தொடர்ந்து இழிவுபடுத்துகிறார் மு.க.ஸ்டாலின். வேல் விவகாரத்திலும் நாடகமாடி வருகிறார்.
நீட் தேர்வு, ஜல்லிக்கட்டுக்குத் தடை போன்றவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. தமிழ் நாடு முன்னேற வேண்டுமென்றால் பிரதமர் நரேந்திர மோடி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ற இரட்டை இன்ஜின் தேவை. கட்டப் பஞ்சாயத்து, மின்வெட்டு, நில அபகரிப்புகள், ரவுடியிசம் போன்றவை உங்களுக்கு தேவையென்றால் திமுகவுக்கு தாராளமாக வாக்களிக்கலாம். முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி இழிவாக பேசியதை நான் கண்டிக்கிறேன். பெண்களை இழிவாக பேசுவதுதான் திமுகவின் டி.என்.ஏ.
கோவை தெற்கு தொகுதியில் ‘பீப்பிள்’ ஹீரோவுக்கும் ‘பிலிம்’ ஹீரோவுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. உங்களுக்கு ‘பீப்பிள்’ ஹீரோ வேண்டுமென்றால், இம்மண்ணின் மகளான வானதி சீனிவாசனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தை டெல்லியில் இருந்து மறைமுகமாக பாஜக ஆள்கிறது எனும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தவறு. கள நிலவரத்துக்கும் கருத்துக்கணிப்புகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நாங்கள் கள நிலவரத்தை மட்டுமே நம்புகிறோம். துக்கடா அரசியல்வாதி வானதி சீனிவாசன் என்ற மக்கள் நீதி மய்யத்தின் கருத்து அக்கட்சியின் அரசியல் பக்குமின்மையைக் காட்டுகிறது” என்று சி.டி.ரவி தெரிவித்தார்.
 

click me!