இன்று ராகுல் காந்தி…. நாளை சோனியா காந்தி… டெல்லியில் அசத்தும் கமல்ஹாசன் !!

First Published Jun 20, 2018, 11:39 PM IST
Highlights
MNM president kamal hassan meet ragul gandhi in delhi


தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்தற்கான நடைமுறைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் டெல்லி சென்ற அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,  காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்  கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி  மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். 

இந்நிலையில் கமல்ஹாசன், தனது கட்சியை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.  இது தொடர்பாக தேர்தல் ஆணையம்  விடுத்த அழைப்பை ஏற்று கமல்ஹாசன் டெல்லி சென்று துணை தேர்தல் ஆணையரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து  மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று முறையாக பதிவு செய்யப்பட்டது.



இந்நிலையில் டெல்லி சென்ற கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அவரது இல்லத்தில் சுமார் 1 மணி நேரம்  இந்த சந்திப்பு நடைபெற்றது.  இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் , கமல்ஹாசனுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. எங்கள் இரு கட்சிகள் தொடர்பாக விரிவாக இருவரும் ஆலோசனை நடத்தினோம். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கமல்ஹாசனிடம் ஆலோசனை செய்தேன் என தெரிவித்திருந்தார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நாளை காலை 11 மணிக்கு கமல்ஹாசன் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

click me!