
தெலங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டக் பெண் கலெக்டரிடம் தவறாக நடந்து கொண்ட ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ. போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மகபூபாபாத் தொகுதி எம்.எல்.ஏ. பி. சங்கர் நாயக். மகபூபாபாத் நகரில் நேற்று முன்தினம், மரம் நடுவிழா நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த மாவட்டத்தின் பெண் கலெக்டரிடம் எம்.எல்.ஏ. சங்கர் நாயக் மிகவும் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்டக் கலெக்டர், மகபூபாபாத் நகர போலீஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. சங்கர் நாயக் குறித்து புகார் செய்தார். இந்த புகாரையடுத்து நகர போலீசார் சங்கர் நாயக் மீது ஐ.பி.சி. 353, 354, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சங்கருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதை ஏற்று நேற்று போலீஸ் நிலையம் வந்த வந்த சங்கர் நாயக் விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மாவட்டக் கலெக்டர் புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்காக எம்.எல்.ஏ. சங்கர் நாயக்கை விசாரணைக்காக அழைத்தோம். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கலெக்டரிடம் தவறாகப் பேசியது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்ப்பட்டார். அதன்பின், அவர் தனிப்பட்ட ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்’’ எனத் தெரிவித்தார்.
மாவட்டக் கலெக்டரிடம் எம்.எல்.ஏ. சங்கர் தவறாக நடந்தது உறுதிசெய்யப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உள்ளூர் டி.வி. சேனல்கள் ஒளிபரப்பிய காட்சியில், கலெக்டரின் கையை எம்.எல்.ஏ. தொடுவது போன்று காட்டப்பட்டது. ஆனால், இதை எம்.எல்.ஏ. சங்கர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த விஷயம் குறித்து அறிந்த முதல்வர் சந்திரசேகர் ராவ், தனது கட்சியின் எம்.எல்.ஏ. நடந்து கொண்டது குறித்து மிகுந்த கோபம் கொண்டார். தனிப்பட்ட முறையில் கலெக்டரை சந்தித்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் எம்.எல்.ஏ.சங்கருக்கு முதல்வர் சந்திர சேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.