
வரும் 17 ஆம் தேதி திங்கட் கிழமை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதிமுக அம்மா அணி எம்எல்ஏக்கள் அனைவரும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என அதிமுகவின் இரு அணிகளும் உறுதி அளித்துள்ளன.
இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி திங்கட் கிழமை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திங்கட்கிழமை வாக்குப் பதிவின்போது யாரும் வாக்களிக்காமல் இருந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.