வன்னியர்களுக்கு திமுக செய்த சாதனைகளை மறைக்க ராமதாஸ் முயற்சி... பாமக அலறவிடும் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jan 28, 2021, 5:40 PM IST
Highlights

 ராமதாஸ் அவர்கள் சொந்த ஆதாயத்திற்காக - சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

திமுக வன்னியர் சமுதாயத்திற்கு செய்த சாதனைகளை மறைத்து ராமதாஸ் பொய் பிரசாரம் செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் 1100 பேர் திமுகவில் இணையும் விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், உரையாற்றிய மு.க.ஸ்டாலின்;- திமுக இயக்கம்தான் சமூகநீதியைக் காப்பாற்றும். இந்த இயக்கம்தான் ஏழை, எளிய - பாட்டாளி மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும். இந்த இயக்கம்தான் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். இந்த இயக்கம்தான் கொரோனா பேரிடர் என்றாலும், நிவர் புயல் என்றாலும் முதலில் ஓடோடி வந்து உதவி செய்யும் - ஆறுதல் சொல்லும்!

அந்த நம்பிக்கையில்தான் நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது என்ற உறுதியை நான் அளிக்க விரும்புகிறேன். வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20 சதவீத இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராடி - உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், உதவித் தொகையைும் அளித்தது தி.மு.க. ஆட்சி.

தமிழ்நாட்டில் முதன்முதலில் டி.ஜி.பி.யாக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த கட்சி தி.மு.க. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க. ஆனால், டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொந்த ஆதாயத்திற்காக - சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீங்கள் எல்லாம் விலகி - இந்த மாபெரும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் தி.மு.க.வை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை.

நேற்றுக்கூட ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை, பினாமிகள் மூலம் வழக்குப் போட்டுத் தடுத்தவர் ஸ்டாலின் என்று ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். பினாமிகளை வைத்து ஊழல் செய்வது, பழனிசாமிக்குக் கைவந்த கலை. பினாமிகள் பெயரில் டெண்டர் விடுவது பழனிசாமிக்குப் பழக்க தோஷம். ஆனால் தி.மு.க. என்றைக்குமே நேரில் எதிர்க்கும் இயக்கம். தவறு என்றால் அதை நெஞ்சுரத்துடன் தட்டிக் கேட்கும் இயக்கம் இது. அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிப்போம் என்று விசாரணை ஆணையம் அமைத்த முதலமைச்சர் பழனிசாமியும், அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை; தர்மயுத்தம் நடத்தி ஆணையம் கேட்ட ஓ.பன்னீர்செல்வமோ - விசாரணைக்கே போகவில்லை. அதனால்தான், "ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முடியாத உங்கள் இருவருக்கும் நினைவு மண்டபத்தை திறந்து வைக்க என்ன யோக்கியதை இருக்கிறது" என்று நான் நேரடியாகவே கேட்டேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!