
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய வேளையில் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். பதவியேற்றது முதலே தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றது முதலே மு.க.ஸ்டாலின் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார். தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என ஓய்வில்லாமல் உழைக்கிறார். ஓய்வில்லாமல் பணியாற்றிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மயக்கமடைந்து, மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வரும் ஓய்வு எடுப்பது மிக அவசியம். அசாதாரண சூழ்நிலைகள் தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் முதல்வருக்கு எந்தக் கோப்பும் அனுப்பக் கூடாது. முதல்வரின் உத்தரவு கேட்பது எனத் தொந்தரவு செய்யக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “முதல்வர், அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், அபத்தமாக வழக்குத் தொடர்ந்ததால், மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்தையும் நீதிபதிகள் விதித்தனர். அந்தத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரணத்துக்காக வழங்க வேண்டும் எனவும், மனுதாரர் ஓராண்டுக்குப் பொதுநல வழக்குகள் தொடரத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.