மு.க.ஸ்டாலின் உழைப்பை பார்த்து அசந்துபோகிறேன்... வியந்துபோகும் அமைச்சர் துரைமுருகன்..!

By Asianet TamilFirst Published Jun 7, 2021, 8:52 PM IST
Highlights

கொரோனா பரவல் தடுப்புப் பணியாக இருந்தாலும் சரி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளாக இருந்தாலும் சரி, முதல்வர் மு.க. ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து நான் அசந்துவிடுகிறேன் என்று  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 

வேலூரில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். “தேர்தல் நேரத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன. அதன் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்தார். அதன்படி முதல்வர் ஆன பிறகு மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற துறையை உருவாக்கியிருக்கிறார். அதற்கென தனி அலுவலர்களை நியமித்து, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தற்போது சென்னை கோட்டையில் முதல்வர் அலுவலகம் இயந்திரம்போல் இயங்கி வருகிறது. கொரோனா பரவல் தடுப்புப் பணியாக இருந்தாலும் சரி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளாக இருந்தாலும் சரி, ஸ்டாலினின் உழைப்பைப் பார்த்து நான் அசந்துவிடுகிறேன். தென்பெண்ணை ஆற்றிலிருந்து வீணாகும் தண்ணீரைப் பாலாற்றுக்குத் திருப்பிவிட்டால் ஆண்டுக்கு 3 மாதங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தை என் காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இவர்கள் திட்டத்தையே மாற்றி வைத்திருக்கிறார்கள்.

 

அதேபோல், பாலாற்றின் குறுக்கே எங்கெல்லாம் தடுப்பணை கட்டலாம் என்பது பற்றி அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மோர்தானா அணையை வரும் 18-ஆம் தேதி திறக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.  அணையின் இடது, வலது காய்வாய் சீரமைப்புப் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். கால்வாய் கரையை உடைத்துத் தண்ணீரைத் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி, மதுரை போன்ற பேருந்து நிலையங்கள் பார்க்க எப்படி இருக்கின்றன? ஆனால், வேலூர் புதிய பேருந்து நிலையம் அப்படி இல்லை. இதையெல்லாம் மாற்ற வேண்டும்” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
 

click me!