கோவில் சொத்துக்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 7, 2021, 7:23 PM IST
Highlights

இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன. இதில் 8,450 கோவில்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை புராதன கோவில்களாக கருதப்படுகின்றன. 44 ஆயிரம் கோவில்களில் 32 ஆயிரத்து 935 கோவில்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், 6,414 கோவில்கள் சிறிய சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், 530 கோவில்கள் பாதி சிதிலமடைந்துள்ளதாகவும், 716 கோவில்கள் முழுமையாக சிதிலமடைந்துள்ளதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதி சிதிலமடைந்த, முழுமையாக சிதிலமடைந்த இந்த கோவில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும்; கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்த சிலைகளை பாதுகாக்க நடடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட  வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறித்தி உள்ளனர்.

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதுடன்,கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும் எனவும், கோவில்களுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். கோவில் நிலங்கள், சொத்துக்களை திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

tags
click me!