#BREAKING ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jun 7, 2021, 6:05 PM IST
Highlights

அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21ம் தேதி முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21ம் தேதி முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கொரோனா 2வது அலை ஏற்பட்டதற்கு பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேரடியாக உரையாற்றினார். அப்போது, கொரோனா 2வது அலைக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. அதில், இந்தியா பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளது. ஏராளமானோர், தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். கடந்த நூற்றாண்டில் பெரிய பேரிடராக இது அமைந்துள்ளது. நவீன உலகம் கொரோனா போன்ற ஒரு பேரிடரை கண்டதில்லை.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு நாம் செய்திருக்கிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் மற்றும் விமானம் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை அவசரகதியில் எடுத்துச் செல்லும் வசதி பெற்றிருக்கிறோம். மக்களுக்கு உதவ முப்படைகள் ஈடுபடுத்தப்பட்டன. அத்தியாவசிய மருந்துகள் உற்பத்தி வேகமாக அதிகரிக்கப்பட்டது.  கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை 1.5 ஆண்டுகளில் வலுப்படுத்தி உள்ளோம்.

மனித குலத்திற்கு கோவிட் மிகப்பெரிய எதிரி. கோவிட்டிற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது. முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மிக அவசியம். கொரோனாவை தடுக்க தடுப்பூசி தான் ஒரே பேராயுதம். உலகில் ஒருசில தடுப்பூசி நிறுவனங்களே உள்ளன.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் பலரை காப்பாற்றி உள்ளோம். ஒரே ஆண்டில் இரு தடுப்பூசிகளை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. தடுப்பூசி மட்டும் சரியான நேரத்தில் கண்டுபிடிக்காமல் இருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

இன்னும் ஒரு ஆண்டில் கொரோனாவை தடுக்க இன்னும் 2 தடுப்பூசி விரைவில் வரவுள்ளது. மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். மூக்கில் விடும் வகையிலான கொரோனா தடுப்பு சொட்டு மருந்து விரைவில் வரும். அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21ம் தேதி முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும். தடுப்பூசி விநியோகத்திற்கான  மாநில அரசுகளின் 25 சதவீதம்  பங்கையும் மத்திய அரசே ஏற்கும். மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்யத் தேவையில்லை எனவும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தலாம். மீதமுள்ள 75 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசே விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

click me!