
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் என்.மருதுகணேஷ் போட்டியிடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுகவினர் எடப்பாடி தரப்பும் டிடிவி தரப்பும் சிதறி கிடப்பதால் நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெற்று தமது ஆளுமையை நிரூபிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
நீண்ட இழுப்பறிகளுக்கு பிறகு வரும் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பின்போது, எடப்பாடி தரப்பில் டிடிவி தினகரனும் ஒபிஎஸ் தரப்பில் மதுசூதனனும் திமுக சார்பில் மருதுகணேஷும் வேட்பாளர்களாக களமிறங்கினர்.
ஆனால் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா அதிகரிக்கவே தேர்தல் ஆணையம் தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் பிசி ஆகிவிட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் தான் ஒருவழியாக இரட்டை இலை பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
உடனே அடுத்த நாளே ஆர்.கே.நகர் தேர்தல் வேலைபாடுகளை கையில் எடுத்துள்ளது தேர்தல் ஆணையம். வரும் 21 ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரியாக வேலுசாமியை நியமனம் செய்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும் பணப்பட்டுவாடா நடைபெறாதவாறு பல்வேறு நூதன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
கடந்த தேர்தலில் அதிமுக இரு தரப்பாக செயல்பட்டது. அதிலேயே ஓட்டுக்கள் பிரிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இப்போதும் இரு தரப்பாகவே செயல்படுகிறது அதிமுக.
டிடிவி தினகரன் ஒரு பக்கம் களமிறங்க தயாராக இருப்பதால் அதிமுகவில் ஓட்டுக்கள் பிரிவது கன்ஃபார்ம்.
இந்நிலையில், இன்று ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக வேட்பாளராக யாரை நியமனம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திமுக வேட்பாளராக மருதுகணேஷையே மீண்டும் நிறுத்துவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மற்ற கட்சிகள் ஆதரவு தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர்.கே.நகரில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுகவினர் எடப்பாடி தரப்பும் டிடிவி தரப்பும் சிதறி கிடப்பதால் நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெற்று தமது ஆளுமையை நிரூபிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.