
பொதுநல வழக்குகள் சுயவிளம்பரத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு சத்தீஸ்கரின் ராய்பூர் பகுதியில் பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட மேடை தொடர்பாக தேசிய புலனாய்வுக் குழு அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என சத்தீஸ்கரி சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கனவே சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதோடு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
விசாரணைக்கு உகந்த வழக்கு அல்ல எனக்கூறி அந்த வழக்கை விசாரிக்க மறுத்த உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தும், அத்துடன் நிறுத்தாத அந்த நபர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு, இதுபோன்ற பொதுநல வழக்குகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒரு அரசியல் கட்சி, 2 ஆண்டுகளுகுப் பின் எவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் ஆதாயத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக கண்டனம் தெரிவித்தனர்.
பொதுநல வழக்கு என்ற பெயரில் இதுபோன்ற அற்பமான மனுவை தாக்கல் செய்யும் தைரியம் அரசியல் கட்சிக்கு எப்படி வந்தது? பொதுநல வழக்கு என்பது ஏழைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால், சுய விளம்பரத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் மட்டுமே தாக்கல் செய்யப்படுகின்றன என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் பொதுநல வழக்குகள் தொடர்பான விதிகளை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.