
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக, அத்தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்தார். அதனால், அவரது தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து நீண்ட இழுபறிக்குப் பின்னர், வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் டிசம்பர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் 27-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால், அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிமுகவின் வேட்பாளர் என்பது தொடர்பாக தலைமை கழகம் விவாதித்து முடிவு செய்யும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனனே மீண்டும் போட்டியிடுவாரா? அல்லது வேறு வேட்பாளர் முன்னிறுத்தப்படுவாரா என்பது தெரியவில்லை.
ஏற்கனவே அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன், இம்முறையும் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார்.
திமுக சார்பில் ஏற்கனவே களம் கண்ட மருதுகணேஷ், இந்த முறையும் போட்டியிடுவார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மருது கணேஷை வேட்பாளராக அறிவித்தார்.