திருச்சியில் திருமா கூட்டிய பெருங்கூட்டம்! மனம் மாறிய ஸ்டாலின்?

By Selva KathirFirst Published Jan 27, 2019, 10:56 AM IST
Highlights

 திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய பிரமாண்ட மாநாட்டை தொடர்ந்து கூட்டணி விவகாரத்தில் ஸ்டாலின் சிறிது இறங்கி வர வாய்ப்புள்ளதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

   தி.மு.க கூட்டணியில் தான் தாங்கள் இருக்கிறோம் என்று வைகோவும், திருமாவும் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். தி.மு.கவுடன் இணைந்து தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தி.மு.க தரப்பில் இருந்து தொடர்ந்து மவுனம் சாதித்து வருகின்றனர்.
 
   இதற்கு காரணம் தி.மு.க கூட்டணியில் திருமாவளவனும், வைகோவும் எதிர்பார்க்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தான். தற்போதைய சூழலில் தமிழகத்தில் தி.மு.கவிற்கு பெரும் ஆதரவு இருப்பதாக ஸ்டாலினை அவருடன் இருப்பவர்கள் உசுப்பேற்றி வருகிறார்கள். தனித்து போட்டியிட்டாலே 39 தொகுதிகளும் நமக்குத்தான் என்றும் அவர்கள் ஸ்டாலினிடம் கூறி வருகிறார்கள்.
 
  இதனால் எதற்காக வாக்கு வங்கியே இல்லாத வைகோவுக்கும், வட மாவட்டங்களில் மட்டும் வாக்கு வங்கி வைத்துள்ள திருமாவளவனுக்கும் தொகுதிகளை அள்ளி கொடுக்க வேண்டும்? கிள்ளிக் கொடுத்தால் கூட என்ன பயன்? என்கிற கேள்வி தான் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க கூட்டணியை தி.மு.க உறுதிப்படுத்தாமல் இழுத்தடித்து வருகிறது.


 
   மேலும் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கினாலும் கூட தி.மு.கவின் சின்னத்தில் தான் வைகோ மற்றும் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு முதலே பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்திக் காட்டினார் திருமாவளவன்.
 
   இந்த மாநாட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து குவிந்துவிட்டனர். திருமாவளவன் எதிர்பார்த்தபடியே கூட்டம் மிகவும் பிரமாண்டமாகவும், ஆர்ப்பரிப்பாகவும் இருந்தது. அதிலும் ஸ்டாலின் பேசும் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செய்த ஆர்ப்பரிப்பு அவரையே நிச்சயம் உற்சாகப்படுத்தியிருக்கும்.


 
   மாநாட்டை தொடர்ந்து திருமாவளவனை தொலைபேசியில் அழைத்து ஸ்டாலின் பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் சில தகவல்களை கசியவிட்டு வருகின்றனர். இதுநாள் வரை உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்கிற தி.மு.கவின் நிபந்தனை விரைவில் தளரும் என்றும், தங்களுக்கான பிரதிநிதித்துவம் விரைவில் தி.மு.க கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பேசி வருகின்றனர்.
 
   திருச்சி மாநாட்டில் தலைவர் கூட்டிய கூட்டம் தான் ஸ்டாலின் மனதை மாற்றியதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். தி.மு.க தரப்பிலும் கூட திருமா கூட்டிய கூட்டம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.

click me!