வைகைப் புயல் வடிவேலுவுக்கு கை கொடுத்த மு.க.ஸ்டாலின்..! ரெட் கார்டு நீக்கப்பட்டதன் பின்னணி..!

By Selva KathirFirst Published Aug 28, 2021, 10:07 AM IST
Highlights

கடந்த 2011ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகின் காமெடி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த வடிவேலு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் பிரச்சனையில் சிக்கினார். அதிமுக ஆட்சி வந்த பிறகு வடிவேலு இருக்கும் திரைப்படங்களை திரையிட விடாமல் சிக்கல் கொடுக்கப்பட்டது. 

கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கியதுடன் சில முக்கிய கோரிக்கைகளையும் வடிவேலு வைத்திருந்தார் வடிவேலு, அந்த கோரிக்கைகள் அனைத்தும் தற்போது நிறைவேறியுள்ளது தான் ஹைலைட்.

கடந்த 2011ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகின் காமெடி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த வடிவேலு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் பிரச்சனையில் சிக்கினார். அதிமுக ஆட்சி வந்த பிறகு வடிவேலு இருக்கும் திரைப்படங்களை திரையிட விடாமல் சிக்கல் கொடுக்கப்பட்டது. இதனால் வடிவேலுவை எந்த தயாரிப்பாளரும் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் தவித்து வந்தனர். பிறகு 2016 தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற சமாதானப்படலங்களை தொடர்ந்து வடிவேலு மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது தான் கடந்த 2017ம் ஆண்டு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இம்சை அரசன் 24ம் புலிகேஷி படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு ஒரு நாள் கூட நடைபெறாமல் முடங்கியது. இதற்கு காரணம் வடிவேலு  மற்றும் இயக்குனர் சிம்பு தேவன் இடையிலான பிரச்சனை என்று கூறப்பட்டது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வில் வடிவேலு தலையிட்டதால் சிம்புதேவன் டென்சன் ஆனதாகவும், தான் கூறியவர்களை படத்தில் நடிக்க வைக்காததால் வடிவேலு படப்பிடிப்புக்கு வர மறுத்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த விவகாரங்களால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. அதாவது படத்திற்காக போடப்பட்ட பிரமாண்ட செட், வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு கொடுத்த அட்வான்ஸ் என எஸ் பிக்சர்ஸ் தள்ளாட நேரிட்டது. பலமுறை வடிவேலுவை அழைத்து பஞ்சாயத்து பேசியும் சிம்பு தேவன் இயக்கத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று வடிவேலு திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் எஸ் பிக்சர்சோ சிம்புதேவன் மட்டுமே தன் படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தை நாட, வடிவேலுவுக்கு ரெட்கார்டு போடப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு வடிவேலுவுக்கு எதிரான ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வடிவேலு சந்தித்து பேசிய சில வாரங்களிலேயே அவரது பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி இம்சை அரசன் 24ம் புலிகேசி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து எஸ் பிக்சர்ஸ் விலகிக் கொள்வது என்றும் அதே நேரத்தில் அந்த படத்தை லைக்கா நிறுவனத்திற்காக வடிவேலு நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை வடிவேலு, ஷங்கர் என இருவருமே ஏற்றுக் கொண்டதால் தான் ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஷங்கர் இறங்கி வர ஆளும் கட்சி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் என்கிறார்கள். வடிவேலு பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி திமுகவில் சினிமா தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும் முக்கிய பிரமுகரிடம் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாகவும் அப்போது முதலே அவர் இரவு பகமாக இந்த விஷயம் தொடர்பாக வடிவேலு, எஸ் பிக்சர்ஸ் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி ஒரு முடிவு எட்டப்பட காரணமாகஇருந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அத்தோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஸ்டாலினும், வடிவேலு பிரச்சனை என்ன ஆச்சு என்று பாலோ செய்து கொண்டே இருந்திரக்கிறார். இதனால் தான் இவ்வளவு விரைவாக பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் உடனடியாக ஸ்டாலினை தொடர்பு கொண்டு வடிவேலு நன்றி தெரிவித்ததாக கூறுகிறார்கள். விரைவில் 24ம் புலிகேஷி திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதுடன் மேலும் படங்களில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு தனது காமெடி பயணத்தை தொடங்குவார் என்கிறார்கள்.

click me!