ரூ.317 கோடியில் திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்..! கனிமொழிக்கு நன்றி கூறிய ஈழத் தமிழர்கள்..!

By Selva KathirFirst Published Aug 28, 2021, 10:02 AM IST
Highlights

பொறியியல் படிப்பு பயிலுவதற்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். 

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 317 கோடி ரூபாய் அளவிற்கு ஈழத்தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த நிலையில் திமுக எம்பி கனிமொழிக்கு பல்வேறு அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களும் நன்றி கூறி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  

பொறியியல் படிப்பு பயிலுவதற்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண் / வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி, முதுநிலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்கள் தங்களது வேலைவாய்ப்புத் தகுதியினை உயர்த்திக் கொள்ளவும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஐந்தாயிரம் முகாம் வாழ் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.     முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 250 ரூபாய் மதிப்பில் 8 வகையான சமையல் பாத்திரங்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வழங்க இயலாத நிலையில், 1,296/- ரூபாய் மதிப்பில் சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்ட வீதத்தில் பாத்திரங்கள் வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஒரு கோடியே 97 இலட்சம் ரூபாய் கூடுதலாக செலவினம் ஏற்படும்.

இதைத்தவிர, முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட இந்த அரசு வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தலுக்கு 261 கோடியே 54 இலட்சம் ரூபாய், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட 12 கோடியே 25 இலட்சம் ரூபாய் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட 43 கோடியே 61 இலட்சம் ரூபாய், மொத்தம் 317 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திடும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை என்கிற அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கும் எந்த அறிவிப்பும் இல்லை.

ஆனால் சுமார் 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது ஈழத்தமிழர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற திமுக எம்பி கனிமொழி அங்குள்ள ஒவ்வொரு அகதிகள் முகாம்களையும் தவறாமல் சென்று பார்த்துள்ளார். அத்துடன் அவர்களின் கோரிக்கை குறித்தும் முழு அளவில் கேட்டுக் கொண்டதோடு அவர்களிடம் மனுக்களை பெற்று அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக ஈழத் தமிழர்களின் குடியிருப்புகள் தொடர்பான கோரிக்கை முழுக்க முழுக்க கனிமொழியிடம் இருந்து வந்த பிறகே நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

முதலமைச்சரின் அறிவிப்பு வெளியான பிறகு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் உடனடியாக அவருக்கு நன்றி தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டனர். அந்த வீடியோக்களில் தவறாமல் கனிமொழிக்கும் அவர்கள் நன்றி கூறியிருப்பதை காண முடிந்தது. இதற்கு காரணம் தங்கள் கோரிக்கைகளை தொகுத்து அவற்றை தீர்வு காண கனிமொழி எடுத்த நடவடிக்கைகள் தான் என்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

click me!